×

செங்கல்பட்டு, காஞ்சி உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்..!

* அக். 6, 9ம் தேதிகளில் 2கட்டமாக வாக்குபதிவு
* 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது. வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாறுதல் மாநில தேர்தல் ஆணையத்தால் 15.9.2021 அன்று வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் 15.9.2021ல் (நாளை) தொடங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்திட ஆணையம் முடிவு செய்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

12.10.2021 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பான நிலையான செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.  தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

வாக்குச்சாவடிகள்: 9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6,652 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்கள்:  நடப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை ஆன்லைன் முறையில் புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. இத்தேர்தலில் 37,77,524 ஆண் வாக்காளர்களும், 38,81,361 பெண் வாக்காளர்களும், 835 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவீன வரம்பானது, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 9,000, கிராம ஊராட்சி தலைவர்- 34,000, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்- 85,000, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- 1,70,00 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊரக பகுதிகளுக்கும், அந்த ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் 5 கி.மீ சுற்றளவு பகுதி வரை அந்தந்த மாவட்டங்களுக்குள் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நேரடி தேர்தல் நடைபெற உள்ள பதவி இடங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி வாக்காளர்களை கொண்டு 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

2ம் கட்டம்
9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 626 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1324 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 9.10.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

முதல்கட்டம்
9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12,252  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 6.10.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படை அல்லாமல் நடைபெறும் தேர்தல்கள்
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.


Tags : 9th District Rural Internal Elections ,Sengalupatu ,Kanchi , Chengalpattu, 9 district rural local elections including Kanchi: Candidature filing starts tomorrow ..!
× RELATED கருடன் கருணை