6 வயது குழந்தையின் முன்பாக நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் போலீஸ் அதிகாரி உல்லாசம்: இருவரும் போக்சோ சட்டத்தில் கைது

உதய்பூர்: ராஜஸ்தானில் பெண் காவலுருடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாக இருந்து மாட்டிக் கொண்ட போலீஸ் அதிகாரியின் விவகாரத்தில் இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹிராலால் சைனி என்பவர், ெபண் கான்ஸ்டபிள் ஒருவருடன் நீச்சல் குளத்தில் ஆபாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதையடுத்து, ராஜஸ்தான் போலீசார் ஹிராலால் சைனியையும், பெண் காவலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டிஎஸ்பி அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி  ஹிராலால் சைனிக்கும், பெண் காவலருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்தது. பெண் காவலர் தனது கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது ஆறு வயது ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனை பயன்படுத்தி, அந்த காவலருடன் போலீஸ் அதிகாரி கள்ளத் தொடர்பில் இருந்தார். கடந்த 9ம் தேதி  ஹிராலால் சைனி, பெண் காவலர் மற்றும் அவரது 6 வயது குழந்தையுடன் உதயப்பூரில் உள்ள ரிசார்ட்டுக்கு சென்றனர்.

அன்றைய தினம் அந்த குழந்தைக்கு பிறந்த நாள் என்பதால், ஜாலியாக இருப்பதற்காக அங்கு சென்றனர். தொடர்ந்து அங்குள்ள நீச்சல் குளத்தில் போலீஸ் அதிகாரியும், காவலரும் ஒன்றாக குளித்துக் கொண்டு ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், அந்த பெண் காவலரின் குழந்தையும் நீச்சல் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குழந்தையின் முன்பே இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனை யாரோ செல்போனில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் வைரலாக்கிவிட்டனர்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் முன் ஆபாச செய்கையில் ஈடுபட்டால் பாலியல் தூண்டல் குற்றம் என்பதால், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப் பட்டது. தொடர்ந்து அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் அந்த பெண் காவலரின் விவாகரத்தான கணவர், தனது குழந்தையின் முன் ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்தோம். தற்போது இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அலட்சியம் காட்டியதற்காக ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றனர்.

Related Stories:

More
>