×

கோயில்களில் காது குத்த அதிக பணம் வசூலித்தால் நடவடிக்கை :அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

புதுக்கோட்டை:கோயில்களில் காது குத்துவதற்கு அதிக பணம் வசூலித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடியில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு நேற்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மசோதா நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் கோயில் சொத்துக்களை யார் அபகரித்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருக்கோவில் வளர்ச்சியை சீரழிக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு துறை சார்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கோயில்களில் பக்தர்கள் இலகுவாக சாமி தரிசனம் செய்வதற்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். திருக்கோவில்களில் பக்தர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் சில வாரங்களுக்கு முன்பு கோவில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் கோவில்களில் வருமானம் குறையும், பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற புகாரும் எழுந்ததன் அடிப்படையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு உடனடியாக ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டார். கோயில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலித்தால் துறைரீதியான குழுவின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Sebabu , கோயில்
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...