கிணற்றுக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி: கொரட்டூரில் சோகம்

ஆவடி: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(36). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு நித்திஸ்வரன் என்ற ஒன்றரை வயதில் மகன் இருந்தான். நேற்று காலை குழந்தை நித்திஸ்வரன் வீட்டுக்கு பின்புறம் உள்ள தரைக்கிணற்றின்யோரமாக விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன், தண்ணீரில் தத்தளித்துள்ளான். இதனிடையே மகனை தேடியபோது கிணற்றில் கிடப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். மகன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் அரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>