புதுக்கோட்டை அருகே ரயிலில் பாய்ந்து ஏட்டு தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இன்று ரயிலில் பாய்ந்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்(49). இலுப்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் தற்போது கலீப் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கண்ணன் 2 நாள் விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வெளியில் செல்வதாக கூறிச்சென்ற கண்ணன் அருகே உள்ள சிவபுரம் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். தகவலறிந்த காரைக்குடி ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கண்ணன் வேலை செய்யும் காவல் நிலையத்தில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் பிரச்னை இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் பணியின் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அந்த வழியே இன்று காலை ராமேஸ்வரம்-சென்னை, திருச்சி-காரைக்குடி ரயில் சென்றுள்ளது. இதில் ஏதாவது ஒரு ரயிலில் அவர் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: