×

போட்டி போட்டு கழிவுநீர் விடுவதால் சதுப்பேரி, கழிஞ்சூர் ஏரிகள் மாசடையும் அவலம் தூர்ந்துபோய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போன ஏரிகள் : வேலூரில் பறிபோகும் நிலத்தடி நீராதாரம்

வேலூர்: வேலூர் சதுப்பேரி, காட்பாடி கழிஞ்சூர் ஏரி முற்றிலும் தூர்ந்துபோய் நாலாபுறமும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போய் உள்ளதால் நிலத்தடி நீராதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கருணை காட்டாமல் உடனடியாக அகற்ற வேண்டும். பட்டா வழங்கப்பட்டு இருந்தாலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.வேலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் என்று நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் நீர்வரத்து கால்வாய்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பது, லஞ்சம் வாங்கிக் கொண்டு, அரசு நிலங்களுக்கு பட்டா வழங்குவது போன்றவையே ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளது.

இதே நிலை நீடித்தால், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும் என்றும், குடிநீருக்கும் மக்கள் பரிதவிக்கும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகளும், நீர்வரத்து கால்வாய்கள், பாசனக்கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேலூர் நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கிய காரணியான சதுப்பேரி 621 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இது அப்துல்லாபுரம் தொடங்கி கொணவட்டம் வரை வடக்கு கரையையும், கொணவட்டம் தொடங்கி தொரப்பாடி வரை நீளமான எல்லையையும் கொண்டது. மிகப்பெரிய ஏரியான சதுப்பேரி நிரம்பி வழியும் கடைவாசலில் இருந்து செல்லும் கால்வாய் முள்ளிப்பாளையம் சிறிய ஏரி வரை வந்து அங்கிருந்து நிக்கல்சன் கால்வாய் வரை இணைப்புக்கால்வாயும் ஒரு காலத்தில் இருந்தது. சதுப்பேரிக்கான நீராதாரமாக பாலாறு உள்ளது. அதோடு ஆக்கிரமிப்பாளர்களின் கரம் நிற்காமல் ஏரிக்குள் கட்டிடங்களாக பல ஏக்கர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சதுப்பேரியின் மறுபுறம் சதுப்பேரி கிராமத்திலும் ஏரியின் ஒரு பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப் பட்டுள்ளது.

ஏரிக்கரையையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியிருப்பதுதான் கூடுதல் வேதனை என்கின்றனர் வேலூர் மக்கள். நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்ற சட்டம் இருந்தும் அதை காலில் போட்டு மிதித்து வருவாய்த்துறையினர் தங்கள் சுயலாபத்துக்காக பட்டாக்களை வாரி வழங்கி உள்ளனர். நாலாபுறமும் ஆக்கிரமிப்புகளால் சதுப்பேரி 200 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. கழிவுநீரும் பல்வேறு வழிகளில் ஏரியில் கலக்கிறது. அப்பகுதி பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றி உள்ளனர். இதனால் ஏரி தூர்நாற்றம் வீசி வருகிறது. மோசமான நிலையில் காட்சி அளித்து வருகிறது. ஒரு காலத்தில் நீராதாரமாக விளங்கிய ஏரி இன்று மாசு அடைந்த ஏரியாக பரிதாப நிலையில் உள்ளது. எனவே, சதுப்பேரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கழிஞ்சூர் பெரிய ஏரிக்கு பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து பணியாற்றி பாலாற்று வெள்ள நீரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். அதற்காக கால்வாய்களில் உள்ள அடைப்புகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. அதன் பயனாக 2 முறை கழிஞ்சூர் பெரிய ஏரி நிரம்பி உள்ளது. ஆனால் ஏரியின் வரத்து கால்வாய்கள், ஏரி பகுதியை பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதால் இருக்கும் இடம் தெரியாமல் கால்வாய்கள் மாறி வருகிறது. இதேபோல் ஒரு காலத்தில் ஓட்டேரி வேலூரின் முக்கிய நீராதாரமாக விளங்கியது. தற்போது அந்த ஏரி வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏரிக்கு வர வேண்டிய நீர் அனைத்தும் தடைப்பட்டுள்ளது. இதனால் அந்த சுற்றுப்புற மக்களுக்கு விவசாயம் செய்ய கூட வழி இல்லாமல் உள்ளனர்.எனவே வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய 3 ஏரிகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வாரி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது.

4.69 கோடியில் பெயரளவில் குடிமராமத்து பணிகள்
அதிமுக ஆட்சிக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 2020-2021-ம் நிதியாண்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 ஏரிகள் 4 கோடியே 69 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே செய்யப்பட்டது. இதனால் தூர் வாரியதாக கணக்கில் காட்டப்பட்ட 14 ஏரிகளும் தூர்ந்துபோன நிலையிலேயே காட்சியளிக்கிறது. மேலும் குடிமராமத்து பணிகள் நடந்த ஏரிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை.அதேபோல் வேலூர் சதுப்பேரி, காட்பாடி கழிஞ்சூர் ஏரிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரில் மிகப்பெரிய ஏரியான சதுப்பேரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி அங்கு சுற்றுலா தலமாக படகு சவாரியை தொடங்கினாலும் அரசுக்கு வருவாய் ஏற்பட்டு இருக்கும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் வேலூரில் உள்ள ஒரு ஏரியை கூட தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் இன்று இந்த ஏரிகள் பாழாகி வருகிறது. எனவே புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுக அரசு இந்த ஏரிகளை தூர்வாரி நீராதாரமாக கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Satuperi ,Kalinchur , Competitive Sewage Disposal of Satuperi and Kalinchur Lakes Pollution and Occupied Lakes
× RELATED வேலூர் சதுப்பேரி கால்வாய்...