குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மேலும் ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்: 1 கோடியில் கருவிகள் வந்திறங்கின

நாகர்கோவில்: குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மேலும் ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. 1 கோடியில் இதற்கான கருவிகள் வந்திறங்கின.குமரி மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்கள் நடந்ததால் நேற்று முன் தினம் பரிசோதனை குறைந்தது.  1906 பேரிடம் மட்டுமே சளி பரிசோதனை நடந்தது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் புதிதாக 32 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 19 பேர் ஆவர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 58,985 ஆக அதிகரித்துள்ளது. அக்டோபரில் 3 வது அலை தாக்கம் தீவிரமாகும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தற்போது, 3 வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸிஜன் வசதி கொண்ட போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் போதிய படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காக மட்டும் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

குமரி மருத்துவக்கல்லூரியில் 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது. கடந்த மே மாதத்தில் 8 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் தான் இருந்தது. நாள் ஒன்றுக்கு சராசரியாக  10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் தேவைப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி குமரி மருத்துவக்கல்லூரிக்கு கூடுதல் ஆக்ஸிஜன் வரவழைக்கப்பட்டது.  தற்போது குறைந்த பட்சம் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு வரை ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. இது தவிர தனியாக 3 கோடியில் ஆக்ஸிஜன் உற்பத்தியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிமிடத்துக்கு 1000 லிட்டர் வரை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலமும் தற்போது ஆக்ஸிஜன் தேவையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான கருவிகள் பெங்களூரில் இருந்து நேற்று காலை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த கருவிகளின் மதிப்பு ₹1 கோடி ஆகும். இந்த கருவிகள் தற்போது உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தியகம் அருகில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியிலேயே புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடிவடைந்ததும், இயந்திரங்கள் ெபாருத்தப்பட்டு உற்பத்தி தொடங்கும் என்றும், கூடுதலாக மேலும் ஒரு ஆக்ஸிஜன் நிரப்பகம் (25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு) வர உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மாணவர்களிடம் சளி பரிசோதனை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது இரு வாரங்கள் ஆன நிலையில் ஏற்கனவே ரேண்டம் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சளி பரிசோதனை நடக்கிறது. அதன் படி நாகர்கோவில் மாநகராட்சியில் 200 பேருக்கு சளி பரிசோதனை நடந்தது. இதில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறந்தன. இதையடுத்து இன்று (14ம் தேதி) முதல் ஒரு வகுப்பறைக்கு 10 பேர் வீதம் மாணவ, மாணவிகளுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories:

>