முதுமலை புலிகள் காப்பக பகுதியில் சூழல் சுற்றுலா மீண்டும் துவங்கப்படுமா?: வாகன ஓட்டிகள், வழிகாட்டிகள் எதிர்பார்ப்பு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகள் மசினகுடி, மாயார், பொக்காபுரம், சிறியூர்  உள்ளிட்டவைகளாகும். இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த  சூழல் சுற்றுலா திட்டம் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் இதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனை மீண்டும் தொடங்க சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மசினகுடி பகுதியில் சுற்றுலா வருமானத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட   சுற்றுலா ஜீப் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர். ‘இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஜீப்புகளில் ஏற்றி வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் ஓட்டிச்சென்று வனவிலங்குகளை காண்பிப்பது இவர்களுக்கு தொழிலாக உள்ளது. முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள், மான்கள், காட்டு எருமைகள், மற்றும் புலி, சிறுத்தை ஆகியவை உள்ளன. ஜீப்புகளில் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவ்வப்போது இந்த வன விலங்குகள் காட்சியளிப்பதால் இவர்களின் சுற்றுலா வருமானம் அதிகரித்து வந்தது.  வனத்துறையினரும் இதனை வரைமுறை படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வனத்துறை மற்றும் உள்ளூர் மக்கள்  அடங்கிய குழு சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு மசினகுடியில் இருந்து மாயார், சிறியூர், பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சூழல் சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து, கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியான மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த சூழல் சுற்றுலா திட்டம் கடந்த 18 மாதங்களாகியும் இதுவரை துவக்கப்படவில்லை.  கொரோனா கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக ஓரளவு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதால், மசினகுடி பகுதியில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.எனினும் சூழல் சுற்றுலா திட்டம் துவக்கப்படாததால் போதிய வருமானமின்றி இருப்பதாகவும், சுற்றுலா வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் மேம்பட சூழல் சுற்றுலா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டிகள், வழிகாட்டிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் இப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: