×

ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் இ- மெசேஜ் வசதியின் மூலமாக ஊடுருவி பெகாசஸ் மென்பொருள் உளவு பார்ப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!

டெல்லி :ஆப்பிள் நிறுவன ஐபோன்களை பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக உளவு பார்க்கும் நடவடிக்கை தொடர்வதாக அமெரிக்க கணினி ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.   இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பல நாடுகளில் அரசை எதிர்ப்பவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டது கடந்த ஜூலையில் அம்பலமானது.  இந்தியாவிலும்  பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஆனால் பெகாசஸ் உளவு குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு நேற்று மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பெகாசஸ் உளவு குறித்து 2 மாத இடைவெளியில் மீண்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை தொடர்வதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சவுதியில் அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்படுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், மேக் புக்ஸ், ஆப்பிள் கடிகாரங்கள் போன்ற சாதனங்களில் இ- மெசேஜ் வசதியின் மூலமாக ஊடுருவி உளவு பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்க அனுப்பப்படும் குறியீடுகளை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த உளவு நடவடிக்கைக்கு சீரோ - கிளிக் அட்டாக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐபோன் உபயோகிப்பவர்கள் பெகாசஸ் மூலமாக குறிவைக்கப்பட்டுள்ளதை அடுத்து அது போன்ற உளவு மென்பொருட்களை தடுக்கும் வகையில் மாற்று மென்பொருள் ஒன்றையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  



Tags : U.S. ,Pegasus ,Apple , பெகாசஸ் உளவு மென்பொருள்
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...