×

ரஷ்யாவில் நடைபெறும் 7 நாடுகளின் ராணுவ கூட்டு பயிற்சியில் கலந்துக்கொண்டு திறமையை நிரூபிக்கும் இந்திய படைகள்!: போர்க்களத்தை கண்முன் கொண்டு வரும் காட்சிகள்..!!

மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்று வரும் 7 நாடுகள் இடையேயான ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய படைகள் கலந்துக்கொண்டு திறமையை நிரூபித்து வருகின்றன. ரஷ்யாவின் நிஸ்னி தவரேட் என்ற பகுதியில் உள்ள முலினோ பயிற்சி தலத்தில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. ZAPAD 2021 என்று பெயரிடப்பட்டுள்ள ராணுவ பயிற்சியில் 7 நாடுகளின் படைகளுடன் இந்திய ராணுவம் கலந்துக் கொண்டுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து ரஷ்யா சென்றுள்ள 200 ராணுவ வீரர்கள், பன்னாட்டு படையினருடன் தீவிர கூட்டு பயிற்சியில் ஈடுபடும் காணொளியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்துவது, பறக்கும் ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு கட்டி குதிப்பது, எதிரி நாட்டின் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிப்பது, விமானத்தில் இருந்து இலக்கு மீது குண்டு மழை பொழிவது போன்ற பயிற்சிகள் போர்க்கள காட்சிகளை கண்முன் கொண்டுவந்தன. முதல்முறையாக இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ரோபோடிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ராணுவ பயிற்சியில் ரஷ்யாவின் படைகளுடன் இந்தியா, பெலாரஸ், அர்மேனியா, கஜகஸ்தான், திரிகிஸ்தான் மற்றும் மங்கோலியா நாடுகளின் ராணுவ வீரர்களும் ஏராளமான தளவாடங்களுடன் கலந்துகொண்டுள்ளன.

ஒரு உண்மையான போர் போன்று நடைபெற்று வரும் ஒத்திகையை ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின், ராணுவ அதிகாரிகளுடன் பார்வையிட்டார். கூட்டு ராணுவ பயிற்சி செப்டம்பர் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒத்திகை பல்வேறு நாடுகளின் ராணுவ நுட்பங்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவில் நடைபெற்று வரும் ZAPAD 2021 கூட்டு போர் பயிற்சி தங்கள் நாடுகளுக்கு கவலை அளிப்பதாக போலந்து, லத்வியா, லித்வேனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

Tags : Russia , Russia, 7 countries, military joint training
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!