32 ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது: சபாநாயகர் அப்பாவு பேச்சு

சென்னை: தமிழக சட்டசபையின் நிறைவு நாளான நேற்று சபாநாயகர் மு.அப்பாவு பேசியதாவது:  சாதாரண ஆசிரியராக இருந்த என்னை இந்த சபாநாயகர் இருக்கையில் அமர வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் 6.4.2021 அன்று நடைபெற்றது. 2.5.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று 7.5.2021 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. 11.5.2021, 12.5.2021 அன்று சட்டசபை கூடியது. பிறகு, 21.6.2021 கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. அந்தக் கூட்டம் 24.6.2021 வரை நடைபெற்றது. தற்போது, 13.8.2021 முதல் 13.9.2021 வரை சட்டசபை பட்ஜெட் கூட்டம் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை மொத்தம் 28 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. 8.9.2021 அன்று மாலையும் கூட்டம் நடந்தது. மொத்தம் 126 மணி 3 நிமிடங்கள் கூட்டம் நடந்துள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பதிலுரை 3 நாட்கள் நடந்தது. 22 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இதில், ஆளுங்கட்சியினர் 10 பேர் பேசிய நேரம் 3 மணி 6 நிமிடம், எதிர்கட்சியான அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் 4 மணி நேரம் 23 நிமிடங்கள் உரையாற்றினர். இதர கட்சியினர் 7 பேர் பேசிய நேரம் 2 மணி 25 நிமிடம். முதலமைச்சர் பதிலுரை ஆற்றிய நேரம் 42 நிமிடம்.  10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 31.8.2021 அன்று முதலமைச்சர் துறையான காவல் துறை கேள்வி நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மானியக்கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் மொத்தம் 17 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில், 134 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.   

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 11.8.2011 அன்று முதலமைச்சரின் வினா எடுத்துக்கொள்ளப்பட்டு பதிலளிக்கப்பட்டது. அதன்பின்னர், 10 ஆண்டுகளுக்கு பிறகு, 16வது பேரவையின் முதல் வினாவாக முதலமைச்சரின் வினா பேரவையில் 31.8.2021 அன்று எடுத்துக்கொள்ளப்பட்டு பதிலளிக்கப்பட்டது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பேரவையில் ஜனநாயகம் மலர்ந்திருக்கிறது. ஒத்துழைத்த முதலமைச்சர் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories:

>