×

காவலர்களுக்கு இடர்படி உயர்வு, மாவட்டங்களில் இலவச பஸ் பயணம்: நீட், டாஸ்மாக் போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:  சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கையின் போது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

* சவாலான மற்றும் முக்கிய இணைய வழி குற்றங்களை புலனாய்வு செய்யவும்,  காவலர்களுக்கு சைபர் குற்றங்கள் புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்க  மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் ெசன்னையில் அமைக்கப்படும்.
* மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில்  மூழுகி இறப்பதை தடுக்க சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர் காப்பு  பிரிவு தொடங்கப்படும். கடலோர காவல் படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும்,  இப்பிரிவில் கடலோர குழுமம் மற்றும் தீயணைப்புத்துறை மீட்பு வீரர்களுடன்  ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
* தீவிர  குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சட்டத்திற்கு புறம்பான  நடவடிக்கைகளை கண்காணிக்கவும், குற்ற விகிதத்தை குறைப்பதற்கு 8.42 கோடி  செலவில் சென்னையில் தெற்கு மற்றும் வடக்கு பிரிவுகளில் தலா ஒரு தீவிர  குற்றவாளிகள் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
* சமூகத்திலும்,  பொருளாதாரத்திலும் பின் தங்கிய சிறுவர் மற்றும் சிறுமியர் தவறான வழியிலும்  எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாமல் இருக்க சிறுவர்  சிறுமியர் மன்றம்  ஏற்படுத்தப்பட்டு, உரிய கல்வி உதவி அளிக்கவும் 38.25 லட்சம்  செலவில் 51  சிறார் மன்றங்கள் உருவாக்கப்படும்.
* காவல் துறையினரின் முயற்சிகளில்  மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு 4.25 கோடி செலவில் சென்னையில் உள்ள 100  பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
* சென்னையில் கூட்டமான இடங்களிலும், நீண்ட தூர சாலைகளை கண்காணிப்பதற்கென 3.60 கோடி செலவில் நடமாடும் டிரோன் அலகு ஏற்படுத்தப்படும்.
* காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களின்  குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல்  நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக  காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருனை  அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இந்த பணிக்காக கணினிகள் மற்றும்  மென்பொருட்கள் கொள்முதல் செய்ய 33 கோடி செலவிடப்படும்.
* பொதுமக்களோடு தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த 1.20 ஆயிரம்  காவலர்களுக்கு 10 கோடி செலவில் சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின் மூலம்  பயிற்சி அளிக்கப்படும்.
* மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த  அடிப்படையில் சேரும் விதமாக அவர்களுக்கு கடலோர காவல் குழுமம் மூலம் 90  லட்சம் செலவில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.
* ஆயிரம் மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையினராக பணி அமர்த்தப்படுவார்கள். இதற்காக 3.40 கோடி செலவிடப்படும்.
* காவலர்- பொதுமக்களிடையே உறவை மேம்படுத்துவதற்காக, காவல் துறை  பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையாக  திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும், பரிந்துரைக்கும் நோக்கத்துடன்  காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும்.
* சென்னை மாநகரில், மண்டல அளவில் 4 சைபர் குற்ற காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
* நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம்  நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப  பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* காவல் துறையினரின் நலன்களை பாதுகாக்க  காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்படி 800இல் இருந்து 1000 உயர்த்தி  வழங்கப்படும். இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.
* காவலர்களின்  நிலுவையில் உள்ள சிறு தண்டனைகள் கைவிடப்படும். இதனால் சிறு தண்டனைகள் பெற்ற  காவலர்கள் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் பெறுவார்கள்.
* காவலர்  முதல் ஆய்வாளர்கள் வரை தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்துகளில்  தங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக ‘நவீன  அடையாள அட்டை’ வழங்கப்படும்.
* காவலர்கள் தங்களது உடல் நலத்தை பேணிக்  காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம்  செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை  உள்ள காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்.
* காவலர்களுக்கு ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை  செய்யப்படுவது போல, இனி அவர்களின் வாழ்க்கை துணைவியருக்கும் சலுகைகள் அளிக்கப்படும். பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனையும் இதில்  சேர்க்கப்படும்.
* காவலர்கள் தற்செயல் விடுப்பினை ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
* சென்னையை தலைமை இடமாக கொண்டு பணியாற்றும்  மாநில நுண்ணறிவு பிரிவு, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறை, பொருளாதார  குற்றப்பிரிவு கடலோர காவல் படை, ரயில்வே காவல் படை மற்றும் காவலர் பயிற்சி  பள்ளியில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு  சென்னை மாநகர காவல் துறையில் வழங்கப்படுவது போல் உணவு படி மாதம் தோறும்  வழங்கப்படும். இதற்காக 14 கோடி செலவாகும்.
* காவலர், தலைமை காவலர்,  உதவி ஆய்வாளர், ஆய்வாளர், டிஎஸ்பிக்கள் ஆகியோருக்கு தற்போது வழங்கப்படும்  வீடுகளின் அளவை விட விகிதாச்சரப்படி உயர்த்தி வழங்கப்படும்.
* நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை  பலப்படுத்தும் விதமாக 9.59 கோடி செலவில் பழுதடைந்துள்ள 62 ரோந்து  வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 62 வாகனங்கள் வழங்கப்படும்.
* ஆயிரம் விளக்கு  பகுதியில் மேன்சன் சைட் என்ற இடத்தில் 275.76 கோடி செலவில் 896 காவலர்,  தலைமை காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
* அலுவல் நிமித்தமாக சென்னை  வரும் காவலர்கள் தங்க ஏதுவாக கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில்  16.20 கோடி செலவில் 450 காவலர்கள் தங்குமிடம் கட்டப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை பணியாளர்களின்  பயிற்சி வசதிகளை நவீனப்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்டம்  காலவாக்கத்தில் அமைய உள்ள ‘மாநில பயிற்சி கழகத்தில்’ 20 கோடி செலவில்  நிகழ்நேர மாதிரி பயிற்சி கூடம் ஒன்று நிறுவப்படும்.
* பெருந் தீவிபத்துகளின் போது  தேவைப்படும் அதிக அளவிலான தண்ணீர் தேவையினை கருத்தில் கொண்டு 16 கோடி  செலவில் 20 தண்ணீர் லாரிகள் வாங்கி வழங்கப்படும்.
* காஞ்சிபுரம், தென் சென்னை மாவட்டம்  தேனாம்பேட்டை, திருவையாறு, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சென்னை புறநகர் மாவட்டம் செங்குன்றம், மணலி, வடசென்னை  மாவட்டம் வண்ணாரப்பேட்டை என 9 இடங்களில் 45.8 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய கட்டிடம் கட்டப்படும்.
* தீயணைப்பு மற்றும் மீட்பு  பணிகள் துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்கென சென்னை  புறநகர் மாவட்டம் செங்குன்றம் 53 குடியிருப்புகள், தேனி மாவட்டம்  போடிநாயக்கனூர் 10 குடியிருப்புகள், திருச்சி மாவட்டம் துறையூர் 18  குடியிருப்புகள், ராணிப்பேட்டையில் 19 குடியிருப்புகள் என 25.43  கோடியில் 100 குடியிருப்புகள் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags : Tasmag ,Chief Minister ,MK Stalin ,Assembly , Assembly, Chief MK Stalin, Announcement
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...