×

நாமக்கல் அருகே பயங்கரம்: திமுக முன்னாள் எம்.பி பேரன் கூலிப்படையை ஏவி படுகொலை: மருமகனை பிடித்து விசாரணை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, நள்ளிரவில் திமுக முன்னாள் எம்பியின் பேரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த அவரது மருமகன் மற்றும் 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் ஜி.பி.எஸ். சோமசுந்தரம். திமுகவை சேர்ந்த இவர் 2 முறை எம்பியாக இருந்துள்ளார். சேலத்து பெரியார் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவரது பேரன் ராஜேந்திரன் (52), விவசாயி. பேளுக்குறிச்சியில் வசித்து வந்தார். இவரது மனைவி சுகுணா (45), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு சுபி என்ற மகளும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, சுபி காதல் திருமணம் செய்து கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு சென்று விட்டார். சுரேஷ் ஆந்திராவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பேளுக்குறிச்சியில் உள்ள வீட்டில், மனைவியுடன் ராஜேந்திரன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், ராஜேந்திரனின் வீட்டுக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து, கதவை தட்டியுள்ளது. சத்தம் கேட்டு ராஜேந்திரன் எழுந்து கதவை திறந்த போது, 4 பேரும் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  உடனடியாக அந்த கும்பல் தப்பியோடி விட்டது. கணவன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்ட சுகுணா செய்வதறியாது திகைத்தார். பின்னர், கூச்சலிட்டுள்ளார். இதை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வந்து, பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு எஸ்பி சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், ராஜேந்திரனின் சடலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், சொத்துக்காக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மருமகன் நவீன்(30) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கும்பலை, நேற்று போலீசார் பிடித்து, தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் எம்பி பேரன் படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Namakkal ,DMK , Namakkal, investigation
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்