வாணியம்பாடியில் அரசியல் பிரமுகர் கொலை: கஞ்சா வியாபாரியை பிடிக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: விளக்கம் கேட்டு டிஎஸ்பிக்கு டிஐஜி மெமோ

வாணியம்பாடி: வாணியம்பாடியில் அரசியல் பிரமுகர் கொலை வழக்கு மற்றும் கஞ்சா வியாபாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்காததால் டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியை சஸ்பெண்ட் செய்தும் விளக்கம் கேட்டு டிஎஸ்பிக்கு மெமோ அளித்தும் வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் கோவிந்தசாமி. திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாணியம்பாடி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 26ம் தேதி வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் என்பவரின் உடற்பயிற்சி கூடத்தில் கஞ்சா பதுக்கி இருப்பதாக அப்போதைய எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார், உடற்பயிற்சி கூடத்தில் சோதனையிட்டனர். அப்போது 10 பட்டாக்கத்திகள், 10 செல்போன்கள், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து  ரஹீம், பாசல், சலாவுதீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய டீல் இம்தியாஸ் மற்றும் செல்வகுமார் உள்ளிட்ட 2 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்து 1 மாதமாகியும் 2 பேரையும் பிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கிடையில் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் மாநில நிர்வாகி வசிம்அக்ரம் கடந்த 10ம் தேதி மாலை கூலிப்படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, சென்னை வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த பிரசாந்த் என்கிற ரவி, வண்டலூரை சேர்ந்த டில்லிகுமார் ஆகிய 2 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜூலை 26ம் தேதி நியூ டவுன் பகுதியில் கஞ்சா பதுக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால், முன்விரோதம் காரணமாக கஞ்சா வியாபாரி இம்தியாஸ் கூறியதன்பேரில் கொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, இம்தியாசை இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியை சஸ்பெண்ட் செய்து வேலூர் சரக டிஐஜி பாபு நேற்று காலை உத்தரவிட்டார். மேலும், வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>