ஆத்தூர் அருகே வீட்டுக்குள் வைத்து பூட்டி தீ வைப்பு: தாத்தா, பாட்டியை எரித்துக்கொன்ற 16 வயது பேரன்: குடிபோதையில் வெறிச்செயல்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே குடிபோதையில் 16 வயது பேரன், வீட்டை பூட்டி தீ வைத்து, தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரை ேசர்ந்தவர் விவசாயி காட்டுராஜா(75). இவரது மனைவி காசியம்மாள்(65). இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக வசிக்கின்றனர்.  மூத்த மகன் தேசிங்குராஜா(51), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். 2வது மகன் குமார்(48), கூலித்தொழிலாளியான இவர் பெற்றோர் வீட்டின் அருகே வசிக்கிறார். இவரது 16 வயது மகன், 11ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் இரவு, காட்டுராஜா மனைவியுடன், தகர ஷீட்டால் மேற்கூரை வேயப்பட்ட குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில், அவரது குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால், தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை.

 தகவலறிந்து ஆத்தூர் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காட்டுராஜாவும், காசியம்மாளும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.

சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், நேரில் விசாரணை நடத்தினார். இது குறித்து, காட்டுராஜாவின் மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, குமாரின் 16 வயது மகன் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

 இதுபற்றி போலீசார் கூறியதாவது: காட்டுராஜாவின் 2வது மகன் குமார், குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் குடித்து விட்டு வந்து மனைவி ஜெயலட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதை கண்ட அவரது 16 வயது மகன் தந்தையை கண்டித்துள்ளான். ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. இதனிடையே, தந்தையை போலவே அவனுக்கும் குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தாயை துன்புறுத்தும் தந்தையின் பெற்றோரை கொலை செய்ய முடிவு செய்துள்ளான்.  மேலும், காட்டுராஜாவும், காசியம்மாளும் தங்களது மூத்த மகன் தேசிங்குராஜாவை பற்றி உயர்வாகவும், சிறுவன் மற்றும் அவனது தந்தை குமார் பற்றி மட்டம் தட்டியும் பேசியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் சம்பவத்தன்று போதையில் வந்து, தாத்தா-பாட்டி தூங்கும் போது வீட்டிற்கு தீ வைத்துள்ளான். அவர்கள் வெளியே ஓடி வந்து விடக்கூடாது என்பதற்காக, வீட்டின் கதவையும் வெளிப்புறமாக பூட்டியுள்ளான்.

 கடந்த 2 நாட்களுக்கு முன், ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி சாலையில் வசிக்கும், காசியம்மாளின் தங்கை சின்னபொண்ணு(60)விடம் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்த சிறுவன், தாத்தா, பாட்டியை கொலை செய்தால்தான் ஆத்திரம் அடங்கும் என்று கூறியுள்ளான். அதன் பின்னரே, இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதையடுத்து, அவனை போலீசார் கைது செய்து சேலத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் நல மையத்தில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: