மீண்டும் பொறுப்பு தலைவர் நியமனம்: முழு நேர தலைவர் இல்லாத தேசிய நிறுவன தீர்ப்பாயம்: பலவீனப்படுத்துகிறதா ஒன்றிய அரசு?

புதுடெல்லி: தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு தொடர்ந்து 3வது முறையாக பொறுப்பு தலைவரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பாயத்திற்கு ஒன்றரை ஆண்டாக முழு நேர தலைவர் நியமிக்கப்படவில்லை. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) என்பது நீதிமன்றத்தை போன்றே சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் எழும் சிக்கல்களை விசாரித்து தகுந்த தீர்ப்புகளை இத்தீர்ப்பாயம் வழங்குகிறது. மேலும், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இத்தீர்ப்பாயம் கண்காணித்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தண்டிக்கிறது.

இதனால், முக்கியமான தீர்ப்பாயமாக உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த நீதிபதி முகோபாத்யாயா கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி ஓய்வு பெற்றார். அதிலிருந்து இன்று வரை முழு நேர தலைவரை ஒன்றிய அரசு நியமிக்காமலேயே உள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்பாமல், அவற்றை பலவீனப்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு 3வது முறையாக மீண்டும் பொறுப்பு தலைவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டாக முழு நேர தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பது, தீர்ப்பாயத்தை பலவீனப்படுத்த, அதன் பணிகளை பாதிக்கச் செய்யும் என என்சிஎல்ஏடி வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளரும் வக்கீலுமான சவுரப் கலியா  கூறி உள்ளார்.

Related Stories:

More
>