×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் முதல்முறையாக சாம்பியன்: ஜோகாவிச் சாதனை கனவு கலைந்தது

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய ரஷ்ய வீரர் மெட்வதேவ் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார். இதனால் ஜோகோவிச்சின் ‘காலண்டர் ஸ்லாம்’ சாதனை முயற்சி வீணானது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை  நடந்த பைனலில் செர்பியாவின்  நோவாக் ஜோகோவிச் (34 வயது), 2வது ரேங்க் வீரர் டானில் மெட்வதேவ் (25) மோதினர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 31வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச், தனது 21வது பட்டத்தை வசப்படுத்தி ரோஜர் பெடர் (சுவிட்சர்லாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரை முந்தும் வாய்ப்பு இருந்து.

யுஸ் ஓபன் பைனலில் 9வது முறையாக விளையாடும்  ஜோகோவிச், இத்தொடரில் தனது 4வது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கினார். இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என 3 கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும் பட்டம் வென்றிருந்த அவர், யுஎஸ் ஓபனிலும் வென்று  ‘காலண்டர் ஸ்லாம்’ சாதனையை படைக்கும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில்  தங்கம் வென்று ‘கோல்டன் ஸ்லாம்’ வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்ததால், இம்முறை சற்று பதற்றத்துடனேயே  விளையாடினார். அவரை எதிர்த்து விளையாடிய  மெட்வதேவுக்கு இது 3வது கிராண்ட் ஸ்லாம் பைனல். 2019 யுஎஸ் ஓபன் பைனலில் நடாலிடம் 5 செட்கள் போராடி தோற்ற மட்வதேவ், இந்த ஆண்டு ஆஸி. ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடம் 0-3 என நேர் செட்களில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

மூன்றாவது முயற்சியில் வென்றாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடிய அவர், ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து முதல் செட்டை 6-4  என கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே உற்சாகத்துடன் தனது அதிவேக சர்வீஸ் மற்றும் துல்லியமான ஷாட்களால் ஜோகோவிச்சை திணறடித்த அவர் அடுத்தடுத்த செட்களையும்  6-4, 6-4 என வென்று 3-0 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசமாக்கினார். இப்போட்டி, 2மணி 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 21வது கிராண்ட்  ஸ்லாம் பட்டத்துடன் பெடரர், நடாலை முந்துவதுடன், ஒரே சீசனில் 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று ‘காலண்டர் ஸ்லாம்’ சாதனை படைக்கும் ஜோகோவிச்சின் முயற்சி இத்தோல்வியால் வீணானது.

மட்டையை நொறுக்கிய நோவாக்!
இறுதிப் போட்டியில் மெட்வதேவிடம் திணறிய ஜோகோவிச், ஒரு முக்கியமான பாயின்ட்டை இழந்த விரக்தியில் தனது டென்னிஸ் மட்டையை ஓங்கி ஓங்கி தரையில் அடித்து உடைத்தார். எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் பதற்றமின்றி விளையாடக் கூடிய அவர், ‘காலண்டர் ஸ்லாம்’ என்ற சாதனை முயற்சியால் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் கட்டுப்பாட்டை இழந்தார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போதும் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.

‘டெட் ஃபிஷ்’ கொண்டாட்டம்!
டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெறும்போது மெட்வதேவ் அதை பெரிதாகக் கொண்டாடுவதில்லை. மிகவும் இயல்பாக, முகத்தில் பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பார். ஆனால், யுஎஸ் ஓபன் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தியதும், வழக்கத்துக்கு மாறாக களத்தில் பாய்ந்து படுத்து நாக்கை வெளியே தள்ளி சில விநாடிகள் அசைவற்று கிடந்தார் மெட்வதேவ். அதை பார்த்தவர்கள் ஒன்றும் புரியாமல் என்ன இது ரொம்ப புதுசாக இருக்கிறதே என்று வியந்தனர். போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘வெற்றியை கொண்டாடாமல் அமைதியாக செல்வது எனது வழக்கம் என்றாலும், முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் என்பதால் வித்தியாசமாக அதைக் கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. அதன் விளைவுதான் இது! பிபா கால்பந்து வீடியோ கேம் விளையாடியவர்களுக்கு மட்டுமே இது புரியும். கோல் அடிக்கும் வீரர்... களத்தில் டைவ் அடித்து இறந்துபோன மீன் போல கிடப்பதுதான் ‘பிரிக் ஃபால்/ டெட் பிஷ்’ செலிப்ரேஷன். இதற்கு ‘L2+left\” பட்டன்களை அழுத்த வேண்டும்’ என விளக்கம் அளித்தார்.

Tags : US Open Tennis ,Medvedev ,Djokovic , US, Open Tennis, Medvedev, Champion
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்