×

கொரோனா 3வது அலையின் தாக்குதலை சந்திக்க 2 லட்சம் படுக்கை தயார்: 50% வென்டிலேட்டர் வசதி: ஒன்றிய அரசு முன்னேற்பாடு

புதுடெல்லி: கொரோனா 3வது அலை தாக்குதலை சந்திப்பதற்காக நாடு முழுவதும் 2 லட்சம் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதில், 50 சதவீத படுக்கைகள் செயற்கை சுவாச கருவி வசதியை கொண்டுள்ளது. நாட்டில் கடந்த ஏப்ரலில் தொடங்கிய கொரோனா 2வது அலையின் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்தது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியது. தற்போது, இந்த அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து, தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்நிலையில், மூன்றாவது அலையின் தாக்குதல் விரைவில் தொடங்கக் கூடும் என்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களி்ல இது உச்சக்கட்டத்தை அடையும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதை சந்திப்பதற்காக ஒன்றிய அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 2 லட்சம் படுக்கைகளை தயார்நிலையில் வைப்பதற்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இதில், 50 சதவீத படுக்கைகள்  வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளுடன் அமைக்கப்படுகின்றன. இது தவிர, கூடுதலாக 40 ஆயிரம் வென்டிலேட்டர் வசதி படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, .உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இருப்பது போக, ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளுக்கும் கூடுதலாக 5 வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் என ஒன்றிய சுகாதாரத் துறை உயரதிகாரி தெரிவித்தார். மேலும் கூறுகையில், ‘‘2வது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் 23 சதவீத பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதன் அடிப்படையில், 3வது அலைக்கான படுக்கை வசதி  ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன,’’ என்றார்.

Tags : Corona ,Union Government , Corona 3rd wave
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...