×

விமான பயணத்தின்போது அவசரகால முன்னெச்சரிக்கைகளை மாநில மொழிகளில் அறிவிப்பது குறித்து பரிசீலனை: விமான போக்குவரத்து துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: விமானங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அறிவிக்கப்படும் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிப்பது குறித்து விமான போக்குவரத்து துறை பரிசீலிக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், விமான பயணத்தின்போது அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும்  முறைகள், நீர் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்தியேக ஆடைகள் இருக்கும் இடம் மற்றும் அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு தரப்படும் கையேடு மற்றும் விமானத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு  மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்கள். அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும். எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் விளக்க  கையேடுகளை இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி உள்ளிட்ட 23  மொழிகளிலும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் விமான  போக்குவரத்து துறையின் செயலாளருக்கு 4 வாரங்களில் புதிதாக மனு அளிக்க வேண்டும். மனுதாரரின் யோசனையை பரிசீலித்து 8 வாரங்களில் விமான போக்குவரத்து துறை முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து  வைத்தனர்.

Tags : Department of Civil Aviation , Consideration of declaration of emergency precautions in state languages during air travel: High Court instruction to the Department of Civil Aviation
× RELATED டிசம்பர் 15ஆம் தேதி முதல்...