கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: ஒரேநாளில் 20 சட்ட மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 13ம் தேதி கூடியது. அன்றைய தினம் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து 14ம் தேதி, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த மாதம் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்துக்கு 19ம் தேதி அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளித்து பேசினர்.

இதை தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து 16 நாட்கள் பல்வேறு மானிய கோரிக்கை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 8ம் தேதி மட்டும் காலை மற்றும் மாலையும் பேரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று இறுதி மானியமாக திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள், பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் நீட் தேர்வுக்கு விலக்கு, அறநிலையத்துறை சொத்துகளை ஆக்கிரமித்தால் கைது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்ளிட்ட 20 சட்ட மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக மொத்தம் 22 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவையில் நேற்று மாலை 3.40 மணிக்கு அறிவித்தார்.

Related Stories:

More
>