ஆவடி, தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் ஆணையரகங்கள்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்துள்ள புகார்களின் அடிப்படையிலும் படிப்படியாக விசாரணைகள் நடந்து வருகின்றன. இவை அனைத்துமே தேர்தல் காலத்தில் மக்கள் மன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகள் தான். அதனைத் தான் இப்பொழுது நாங்கள் நிறைவேற்ற தொடங்கியிருக்கிறோம். ‘இதுமட்டும்தானா?’ என நீங்கள் நினைத்து விட வேண்டாம். மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளது போல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், ஆவடி, தாம்பரம் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்.

சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு, அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் வரும் செப்டம்பர் 15ம் தேதியன்று வருகிறது. அப்போது, நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மக்கள் தொகைக்கேற்ப மக்களுக்கு சேவையாற்ற 10 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு வசதியாக 4 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>