தனியார் பொறியியல் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை: பெற்றோர் கண்முன் பரிதாபம்; ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தங்ககுமார். அரியலூர் மாவட்டத்தில் தங்கி, சிமென்ட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அபிதா (19), ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் அபிதா, அரியலூரில் இருந்தார். அங்கிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தார். சமீபத்தில் அரசு உத்தரவுபடி கல்லூரி திறக்கப்பட்டதையடுத்து அபிதா, கல்லூரிக்கு வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.

இவர், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர், மாணவியிடம் விசாரித்தபோது, தனக்கு படிக்க விருப்பமில்லை என்றும், பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் கல்லூரிக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம், அபிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அபிதாவின் பெற்றோர், நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் வந்தனர். மதியம் அவர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசினர். அப்போது, அபிதா, மன அழுத்தத்தில் இருக்கிறார். நாங்கள் பலமுறை கவுன்சிலிங் கொடுத்தும் சரியாகவில்லை. எனவே நீங்கள் உங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். மன அழுத்தம் நீங்கி, அவர் முழுமையாக குணமடைந்த பின்னர், மீண்டும் கல்லூரிக்கு அனுப்புங்கள்’’ என்று கூறியுள்ளனர். அதற்கு, மாணவியின் பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து, மகளை ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

அப்போது அபிதா, பெற்றோரை இங்கேயே இருங்கள். நான் மேலே சென்று அறையில் உள்ள எனது உடமைகளை எடுத்து வருகிறேன்’’ என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால், பெற்றோர் தரை தளத்தில் காத்திருந்தனர். ஆனால், 5வது மாடிக்கு சென்ற மாணவி, அங்கிருந்து கிழே குதித்தார். இதை பார்த்த பெற்றோரும், கல்லூரி ஊழியர்களும் பதறியடித்து கொண்டு மாணவியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அபிதா பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: