காவலர்களின் தேவைகளை அறிய தமிழகத்தில் மீண்டும் காவல்துறை ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காவலர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் மீண்டும் காவல் துறை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவல் துறை முன்னேற்றத்திற்கு திமுக அரசு கடந்த காலங்களில் நிகழ்த்திய அரிய பல சாதனைகளின் உணர்வுடன், அந்த உணர்வு உருவாக்கித் தந்துள்ள உவகையுடன் நான் இப்போது பதிலுரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

கடந்த ஒருமாத காலமாக நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய அமைச்சர்கள் அனைவரும் இந்த அரசிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை விரிவாகப் பேசியிருக்கிறார்கள். உள் துறை சார்பில் என்னைக் கேட்டால், எதுவெல்லாம் இல்லை என்பதைத் தான் நான் சொல்ல முடியும். இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. மத மோதல்கள் எழவில்லை. துப்பாக்கிச் சூடுகள் இல்லை. அராஜகங்கள் இல்லை. இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனையாகும்.

 உள் துறை சார்பில் சொல்ல விரும்புவது, தமிழ்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துத்  தந்திருக்கின்றோம். அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்திலும் விடுப்பே இல்லாமல்  தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள். அவர்கள் தியாகத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. ஆனாலும், அவர்களுக்கு நாம் காட்டும் நன்றியின் அடையாளமாக ரூ.25 லட்சம் வழங்கினோம். காவலர்கள் அனைவருக்கும் தலா 5,000 ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய அரசுதான் இந்த அரசு. இதற்கென 58.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

விடுப்பே இல்லாமல் பணியாற்றும் காவலர்களின் கவலையைப் போக்க வாரத்தில் ஒருநாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 968 உதவி ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தடய அறிவியல் துறை சார்பில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்காக 62  பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று நான் மக்களிடம்  மனுக்களைப் பெற்றேன். அந்த மனுக்களை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னேன்.

அந்த மனுக்களில் உள் துறை சார்பாக வந்த மனுக்கள் 1,498. இந்த மனுக்கள் அனைத்துக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். காவலர்கள் நலன் பேணுவதில் திமுக அரசு எப்போதும்  சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு முறை ஆட்சியில் அமருகின்ற போதும், காவலர்கள் அனைவரது கவலையையும் தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். காவல் துறையை  நவீனப்படுத்துவதற்காக, 1969ம் ஆண்டு முதலாவது காவல் துறை ஆணையம், 1989ம் ஆண்டு இரண்டாவது காவல் துறை ஆணையம், 2006ம் ஆண்டு 3வது காவல் துறை ஆணையம்  அமைத்து, அந்த ஆணையங்களின் பரிந்துரைகளை நிறைவேற்றியவர் தான் கலைஞர்.

1971ம் ஆண்டு காவல் துறையில் கம்ப்யூட்டர் பிரிவைத் தொடங்கியதும், வீரதீர செயல்கள்புரியும் காவலர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கத் தொடங்கியதும் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் தான். அவரது வழிநின்று, காவலர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிவதற்காக காவல் துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண்  சட்டங்கள், சேலம் எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணு உலை, மீத்தேன்,  நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாகச் சொன்னோம். அதன்படி,  5,570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன.

 

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆட்சியின் போது, 22-5-2018 அன்று நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்பாவி மக்கள்மீது போடப்பட்ட 36 வழக்குகள்  திரும்பப் பெறப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக தரப்பட்டுள்ளது. இறந்தவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அவர்களது  தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். ஒவ்வொரு முறை திமுக அரசு ஆட்சியில் அமரும் போதும், காவலர்கள் அனைவரது கவலையையும் தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்”

Related Stories:

>