×

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக அக். 6, 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் மனு தாக்கல்; அக்.12ல் வாக்கு எண்ணிக்கை; மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது. வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் 22.6.2021 வழங்கிய ஆணையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான அறிவிக்கைகளை வெளியிட்டு 15.9.2021க்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதற்கான அறிவிப்புகள் 3.8.2021 அன்று வெளியிடப்பட்டது. இதேபோல், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டது. அதன்பின்னர், 31.8.2021ல் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டது. 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாறுதல் மாநில தேர்தல் ஆணையத்தால் 15.9.2021 அன்று வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் 15.9.2021ல் (நாளை) தொடங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையின்படி வாக்குப்பதிவு நேரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்திட ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படும். 12.10.2021 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பான நிலையான செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

வாக்குச்சாவடிகள்: 9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7,921 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6,652 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்கள்: நடப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை ஆன்லைன் முறையில் புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. இத்தேர்தலில் 37,77,524 ஆண் வாக்காளர்களும், 38,81,361 பெண் வாக்காளர்களும், 835 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

முதல்கட்ட தேர்தலில் 41,93,996 வாக்காளர்களும், 2ம்கட்ட தேர்தலில் 34,65,764 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்காக 1 லட்சத்து 10 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இத்தேர்தலில் 41,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வீதம் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.  

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் படிவம் ஏ, பி ஆகியவற்றை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு திரும்பபெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்குள் சேர்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராக மட்டுமே கருதப்படுவார். பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவீன வரம்பானது, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 9,000, கிராம ஊராட்சி தலைவர்- 34,000, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்- 85,000, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- 1,70,00 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல்:  உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தல் 22.10.2021 அன்று நடைபெறும். மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்கள்-9, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடங்கள்- 9, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள்- 74, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவியிடங்கள்- 74, கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள் 2,901 என மொத்தம் 3,067 இடங்களுக்கு நடைபெறும்.

தற்செயல் தேர்தல்கள்:  ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019ல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் ஜூன் 2021 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்கள் என 789 பதவியிடங்களுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 9.10.2021 அன்று நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் 15.9.2021 அன்று துவங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று காலை 8 மணிக்கு தொடங்கும். 28 மாவட்டங்களில் நடைபெறும் தற்செயல் தேர்தல்களில் 2,802 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 13,75,992 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும், 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊரக பகுதிகளுக்கும், அந்த ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் 5 கி.மீ சுற்றளவு பகுதி வரை அந்தந்த மாவட்டங்களுக்குள் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அமலில் இருக்கும்.

இதேபோல், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகிய முன்னேற்பாடுகள் செய்திட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கை உறைகள், பிபிஇ கிட்ஸ், வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* 4 விதமான வாக்குச்சீட்டு
ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஒரு வாக்குச்சாவடியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு இரண்டு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும்.

தேர்தல் அட்டவணை
மனுத்தாக்கல் துவக்கம்    செப்.15
மனு செய்ய இறுதி நாள்    செப்.22
மனு பரிசீலனை    செப்.23
வாபஸ் பெற கடைசி நாள்    செப்.25
முதல்கட்ட வாக்குப்பதிவு    அக்.6
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு    அக்.9
ஏனைய 28 மாவட்டங்களில்
தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு    அக்.9
வாக்கு எண்ணிக்கை    அக்.12
வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு    அக்.20
சாதாரண தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் கூட்டம்- அக்.22

* நேரடி தேர்தல் நடைபெற உள்ள பதவி இடங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி வாக்காளர்களை கொண்டு 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

* முதல்கட்டம்
9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12,252  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 6.10.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

* 2ம் கட்டம்
9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 626 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1324 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 9.10.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

* கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படை அல்லாமல் நடைபெறும் தேர்தல்கள்
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.


Tags : Chengalpattu ,Kanchipuram ,State ,Palanikumar , Chengalpattu and Kanchipuram in 9 districts in 2 phases. Rural local elections on 6th and 9th: Petition filed from tomorrow; Vote count on Oct. 12; Announcement by State Election Commissioner Palanikumar
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...