சூரிய ஒளி மின் உற்பத்தியில் நாம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளோம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சு..!

புதுச்சேரி: சூரிய ஒளி மின் உற்பத்தியில் நாம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளோம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் 2.4 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு சூரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுக் குழு வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் குறித்த அறிக்கையில், உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. அது எதிர்கால நிகழ்வல்ல. ஏற்கெனவே அதனை நாம் அனுபவித்து வருகிறோம். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சமீப காலங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி மிக முக்கியமாக விளங்குகிறது.

இதுபோன்ற சமயத்தில், கல்வி நிறுவனங்களில் நாட்டிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியதாகும். தேசிய சூரிய எரிசக்தி நிறுவனம் நமது நாட்டின் 3 சதவீத வெற்று நிலங்களில் சூரிய ஒளி மின்தகடுகளை நிறுவுவதன் மூலம் 748 ஜிகாவாட் சூரிய ஆற்றல் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது குக்கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்கவும், எரிசக்தி தன்னிறைவை அடையவும் வழிவகுக்கும். இந்தியா இதுவரை 40 ஜிகாவாட் அளவுக்கான சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை நிறுவியுள்ளது.

சூரிய ஒளி மின் உற்பத்தியில் தற்போது நாம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளோம். விரைவில் உலகில் முன்னிலையில் வருவோம். உள்நாட்டில் சூரிய ஒளி சேமிப்புக் கலன்கள், சூரிய ஒளி கட்டமைப்பு தயாரிப்பில் பற்றாக்குறை நிலவுகிறது. இவற்றை இங்குள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இவற்றை ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும்.

Related Stories:

More
>