சேலம் பட்டர்பிளை பாலத்தில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ மகன் விபத்தில் சிக்கினார்.! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்

சேலம்: கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மகன் ஓட்டி வந்த கார் சேலத்தில் விபத்தில் சிக்கியது. கார் சேதமடைந்த நிலையில் காயமின்றி அவர் உயிர்தப்பினார். கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவரது மகன் ஆதர்ஸ் (22). இவர் நேற்று இரவு கார் மூலம் கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். இரவு 11.30 மணியளவில் கார் சேலம் பட்டர்பிளை பாலத்தில் இருந்து இறங்கும்போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் கார் நொறுங்கியது. அந்நேரத்தில் அவ்வழியாக வந்து கொண்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தினர், கார் கவிழ்ந்து கிடந்ததை கண்டனர்.

உடனடியாக சென்று காரில் இருந்த ஆதர்சை மீட்டனர். இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சேலம் மாநகர பாஜ நிர்வாகிகள் சுரேஷ்பாபு, கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆதர்சை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் வேறொரு கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சேதமடைந்த காரை மீட்ட அன்னதானப்பட்டி போலீசார் ஸ்டேஷனுக்கு ெகாண்டு வந்தனர். காரை வேகமாக ஓட்டிவந்த ஆதர்ஸ், வளைவில் திரும்பும்போது கார் விபத்தில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>