×

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பெகாசஸ் விவகாரத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்கும்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தும்படியும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடும்படியும் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால தொடர் முழுவதும் அமளியால் முடங்கியது. ஆனால், இந்த கோரிக்கைகள் எதையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை. இந்நிலையில், இந்த ஒட்டு கேட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2 பக்க பிரமாணப் பத்திரத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், முழு விவரங்களும் அடங்கிய விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, பெகாசஸ் தொடர்பாக விசாரனை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூரை மேற்கு வங்க மாநில அரசு தனியாக நியமனம் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திர தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு ஒன்றிய அரசு தரப்பிலும் கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வியெழுப்பினார். அப்போது ஒன்றிய அரசு தரப்பில் வழக்கறிஞர்,, தேசிய பாதுகாப்பு நலன் அனைத்தும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளதால், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. அரசின் நிலைப்பாடும் அதுவாக தான் உள்ளது, என்றார்.

 இதையடுத்து உத்தரவில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பெகாசஸ் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என ஒன்றிய அரசு கூறுவதை ஏற்க முடியாது. இருப்பினும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் அனைத்து தரப்பு மனுதாரர்களின் வாதங்களையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. அவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தில் நீதிமன்றமே மூன்று நாட்களுக்குள் தன்னிட்சையாக ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். மேலும் இந்த விவகாரத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது தொடர்பான முடிவை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில், ஒன்றிய அரசு அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை மூன்று நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags : U.S. government ,Pegasus ,Supreme Court , பெகாசஸ்
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...