×

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்? என்ன சொல்கிறார் கங்குலி

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருபவர் ரவிசாஸ்திரி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி தற்போது வரை சிறப்பாகவே ஆடி வருகிறது. அவரது பயிற்சியாளர் ஒப்பந்தம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழு அளித்த அறிவுரையின்படி, அவரது பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் இந்தாண்டின் இறுதியுடன் நிறைவு பெறுகிறது.

இதனால், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல்டிராவிட்டே நியமிக்கப்படுவார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகிறது. அதேவேளையில், சமீபத்தில் உலககோப்பை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தோனியும் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலியிடம் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டிற்கு நிரந்தரமாக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு ஆர்வம் இல்லை. அதனால், நாங்கள் அவரிடம் அதுபற்றி குறிப்பாக கேட்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது பார்ப்போம் என்றார். மேலும், கங்குலியிடம் தோனியை உலககோப்பை அணிக்கான ஆலோசகராக நியமித்தது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

தோனியை ஆலோசகராக நியமித்தது தொடர்பான ஆலோசனை யாருடையது என்பது முக்கியமல்ல. இந்தியா வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமான விஷயம். தோனி உலக கோப்பைககு மட்டும்தான் இந்திய அணியுடன் இருக்கப்போகிறார். அதை அவர் எங்களிடம் தெளிவாக கூறியுள்ளார் என்றும் கங்குலி கூறினார். ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளதால், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அவரது பயிற்சியின் கீழ் பயிற்சி பெற்ற சுப்மான் கில், பிரித்விஷா உள்ளிட்ட பல வீரர்களும் தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணிக்கும் ராகுல் டிராவிட்டே பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவரது தலைமையில் இந்திய அணி 2007ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rahul Dravid ,Indian cricket team ,Ganguly , Is Rahul Dravid the new head coach of the Indian cricket team? What Ganguly says
× RELATED 100வது டெஸ்டில் அவர் பேசியதை...