இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இலங்கை சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இந்நிலையில் நேற்றிரவு கொழும்புவில் 2வது டி20 போட்டி நடந்தது. `டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணியில் துவக்க வீரர் தினேஷ் சண்டிமால் (5) ஏமாற்றினார். குசால் பெரேரா (30), பானுகா ராஜபக்சா (20) ஓரளவுக்கு ஆறுதலாக ஆடினர். இதைத்தொடர்ந்து வந்த தனஞ்செயா டி சில்வா (4), கேப்டன் தசுன் ஷனகா (10) ஏமாற்றினர்.

இதனால் இலங்கை அணி 18.1 ஓவரில், 103 ரன்னுக்கு `ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் மார்க்ரம், ஷாம்சி தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 104 ரன் என்ற எளிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (18) சுமாரான துவக்கம் தந்தார். ஆனால் அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் (58*), மார்க்ரம் (21*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 14.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.

Related Stories:

>