×

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,225 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள்-அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் துவக்கி வைத்தனர்

சின்னாளபட்டி : தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1,225 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி, சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்கள், அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நேற்று ஒருநாள் மட்டும் 1,450 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிரகந்தநாயகி தலைமையில், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், அகிலன், தங்கத்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் பரத்கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் ஏஞ்சலின், பரமகுரு, செந்தமிழன், சுரேஷ்குமார், முரளி ஆகியோர் தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட ஏ.பி.பி.நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்.

மேலும் நகரில் சங்குப்பிள்ளைபுதூர், ஏ.பி.காலணி, திண்டுக்கல் மெயின் ரோடு, காந்திநகர், விஸ்வநாதன்நகர், மாருதிநகர், சி.எஸ்.ஐ.பள்ளி, சத்யாநகர், பழனிக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட நகரின் 10 இடங்களிலும் நடந்தது. இந்நிகழ்வில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், வட்டாட்சியர் முத்துச்சாமி, ஆணையாளர் தேவிகா, டி.எஸ்.பி.சோமசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.அதுபோல், தும்மிச்சம்பட்டிபுதூர், மாருதிநகர், சங்குப்பிள்ளைபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடந்த முகாம்களை தமிழ்நாடு நகரியல் பயிற்சிகளின் இணை இயக்குனர் நாராயணன் நேரில் ஆய்வு செய்தார்.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாக்குச்சாவடிகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட 61 இடங்கள், பாளையம் பேரூராட்சியில் 9 இடங்கள் என மொத்தம் 70 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முன்னதாக வாணிக்கரை ஊராட்சியில், வாணிக்கரை அங்கன்வாடி மையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் காந்திராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார்.

இதில் குஜிலியம்பாறை திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், குஜிலியம்பாறை தாசில்தார் சரவணவாசன், குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ, பிடிஓக்கள் வசந்தா, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுபோல் மாவட்டத்தில் கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேள தாளம், வெற்றிலை பாக்குடன் மக்களுக்கு வரவேற்பு

வேடசந்தூர் ஆத்துமேடு ராஜாகோபாலபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் முகாமுக்கு வந்த மக்களை மேள வாத்தியம் முழங்க பாடல்கள் பாடி வரவேற்றனர். எம்எல்ஏ காந்திராஜன், மாவட்ட கல்வி அதிகாரி கீதா, பாடலாசிரியர் மாரம்பாடி ஜேசுதாஸ், வட்டார மருத்துவர் மகேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், திமுக நகர செயலாளர் கார்த்திகேயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சியில் முகாம் நடந்த இடங்களில் வாழை மர தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வீடு வீடாகச் சென்று, வெற்றிலை பாக்குடன் பொது மக்களை ஊராட்சித் தலைவர் விஜயா வீராச்சாமி வரவேற்றார். இதில், பிடிஓ மணிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அமிர்ததர் சினிராஜா, துணைத் தலைவர் பிரபாகரன், ஊராட்சி செயலர் ஜெயபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குலுக்கலில் பரிசுகள்: குதூகலித்த மக்கள்

சீலப்பாடி மற்றும் முள்ளிப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட என் எஸ் நகர், செல்லமந்தாடி, சீலப்பாடி, சாலையூர், கொத்தம்பட்டி , முள்ளிப்பாடி, பாறையூர், செட்டியபட்டி, கோடாங்கி நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டவர்களில், குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு மிக்ஸி , குக்கர், டேபிள் பேன் ஆகிய பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. சீலப்பாடி ஊராட்சித் தலைவர் மீனாட்சி, பிடிஓ காமராஜ், சுகாதார ஆய்வாளர் முருகேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் சுதாகரன் உட்பட கலந்து கொண்டனர். அதேபோல் முள்ளிப்பாடி ஊராட்சித் தலைவர் மாதவி காமராஜ், பிடிஓ மலரவன், உதவி திட்ட அலுவலர் அன்புச்செல்வன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, ஊராட்சி செயலாளர் வசந்தகுமார் உட்பட ஊராட்சி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குஜிலியம்பாறை ஒன்றியம், பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட முத்தம்பட்டி, பாளையம், சிலும்பாக்கவுண்டனூர், வான்ராயன்பட்டி, சானிபட்டி, செங்காளியூர், இராமகிரி, குஜிலியம்பாறை, சேவகவுண்டன்புதூர் ஆகிய 9 இடங்களில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு மிக்சி, 2ம் பரிசு குக்கர், 3ம் பரிசு மின்விசிறி, 4ம் பரிசு ஹெல்மெட் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் ஆர்வமுடன் வந்து சென்றனர்.

Tags : Tindukkal district , Chinnalapatti: Mega corona vaccination camps were held across Tamil Nadu yesterday. Special vaccination camps at 1,225 places in Dindigul district
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது