உலக மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட நெம்மேலி கிராமத்தில் 108 பசுக்களுக்கு கோ-பூஜை

பட்டுக்கோட்டை : உலக மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட நெம்மேலி கிராமத்தில் 108 பசுக்களுக்கு கோ-பூஜை நடந்தது.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நெம்மேலி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் கோ பூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் 21ம் ஆண்டு கோபூஜை விழா அதே கிராமத்தில் உள்ள உண்ணாமுலை தாயார் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று நடந்தது.

உலக நன்மை வேண்டி நடந்த இந்த கோ பூஜை விழாவில் நெம்மேலி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 108 பசுக்கள் கலந்து கொண்டது. முதலில் கோ பூஜை விழாவில் கலந்து கொள்ள வந்த பசுக்களுக்கு சந்தனம், குங்குமமிட்டு, கொம்பில் துணி மற்றும் மணி கட்டி, சேலை அணிவித்து வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரே இடத்தில் 108 பசுக்களையும் வைத்து கோ பூஜை விழா நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பசுக்களுக்கும் பட்டுக்கோட்டை நந்தீஸ்வரர் சுப்ரமணியன், நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் கார்காவயல் சித்தர், சிவத்தொண்டர்கள் ராஜகோபால், சூரைசண்முகம், முருகேசன், ஜெயவேல், கணேசன், நெம்மேலி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சனிராஜராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், உலக நன்மை வேண்டி இந்த கோபூஜை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இன்றைய (நேற்று) தினம் நீட் தேர்வு எழுதக்கூடிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வில் வெற்றி பெறவும், உலக மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து நாம் அனைவரும் அடியோடு விடுபடவும் இந்த கோ பூஜை விழா நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கோ பூஜை விழாவை கண்டு, அருணாச்சலேஸ்வரரைவழிபட்டு சென்றனர்.

Related Stories: