×

விமானங்களில் அவசரகால அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா?: விமான போக்குவரத்து துறை பரிசீலிக்‍க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா? என்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும். விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்குள்ளது. ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் பயன்படுத்தும் முறைகள், சீட்பெல்ட் அணியும் முறைகள் ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் மட்டுமே ஆங்கிலமும் இந்தியும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானங்களில் அறிவிக்கப்படும் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் வெளியிடப்படும் அவசரகால அறிவிப்புகளை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனுதாரரின் யோசனையை ஒன்றிய விமான போக்குவரத்து துறை செயலாளர் பரிசீலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Air Transport Department , Aircraft, State Language, Emergency Notification, iCord
× RELATED 27ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான...