×

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடந்தது புதுச்சேரியில் 14 மையங்களில் 7 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர்

புதுச்சேரி : புதுவையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 14 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. 7 ஆயிரம் மாணவ, மாணவிகள்தேர்வு எழுதினர்.
 ஆண்டுதோறும்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி, நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் நேற்று காலாப்பட்டு கேந்திர வித்யாலயா, ஐயங்குட்டிபாளையம்  விவேகானந்தா, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, முத்தியால்பேட்டை வாசவி பள்ளி  உள்ளிட்ட 14 மையங்களில் நடைபெற்றது. நுழைவு சீட்டு பெற்றிருந்த 7,123  மாணவர்களில் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

 தேர்வில் பங்கேற்ற  மாணவர்களுக்கு வழக்கம்போல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் உடல்வெப்ப நிலை,  ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதித்து கைகளை கிருமிநாசினி கொண்டு  சுத்தப்படுத்திய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். உடல்வெப்பம் அதிமாக இருந்தவர்கள் தனிமைப்படுத்தி தேர்வெழுதவும் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. முழுக்கை சட்டை  அணிந்த, நகை மற்றும் ஷூ ஆகியவை அணிந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு அனுமதி  மறுக்கப்பட்டது. இதனால் நகை, ஷூவை கழற்றிவிட்டு மாணவர்கள் தேர்வு  மையத்திற்குள் சென்றனர். செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டது. மதியம் 2  மணிக்கு துவங்கிய  தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவிகள் கதறல்

வில்லியனூர் தனியார் பொறியியல் கல்லூரியிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் பகல் 12.30 மணிக்குள் தேர்வு மைய வளாகத்திற்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் காலை 10 மணி முதலே பெற்றோருடன் தேர்வு மையத்திற்கு வரத் தொடங்கினர். காரைக்காலை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. கண்ணீர் விட்டு கெஞ்சிப்பார்த்தும் தேர்வு மைய அதிகாரிகள் அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். இதனால் கதறி அழுத அந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாணவிகளுக்கு கவர்னர் வாழ்த்து

முத்தியால்பேட்டை நீட் தேர்வு மையத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். தேர்வெழுத வந்த மாணவிகள் மத்தியில் பேசிய கவர்னர்
தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ள வேண்டும் என்றார். பின்னர் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Corona ,Pondicherry , Puducherry: NEED examination was held at 14 centers in Puducherry following corona safety guidelines. 7 thousand students wrote the exam.
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...