×

சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா துவக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஒரே மேடையில் பங்கேற்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ஒரே மேடையில் பங்கேற்றனர். சென்னை திருவல்லிக்கேணியில், மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தில், அவரின் நூற்றாண்டு நினைவு நாள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் வானவில் கே.ரவி, வானவில் பன்பாட்டு மைய தலைவர் வ.வே.சு உள்ளிட்டோர் கலந்துகொண்டார். முன்பாக, பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், வானவில் பண்பாட்டு மைய தலைவர் வ.வே.சு வரவேற்றார். நிகழ்ச்சியில் பாரதியின் வரிகளை 18 மொழிகளில் மொழிபெயர்த்ததகற்கான நினைவு பரிசு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் பாரதிச்சுடரை முதல்வர் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதினார். அத்தகைய  பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றக்கூடிய விழாவாக வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு, உணர்ச்சியோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உங்கள் அமைப்பின் பெயர் வானவில் பண்பாட்டு மையம் என்பதாகும். வானவில்லின் வண்ணங்கள் ஏழுதான். ஆனால், மகாகவி பாரதியினுடைய வண்ணங்களும் எண்ணங்களும் ஏழு என்ற எண்ணிக்கைக்குள் அடக்க முடியாதவை.

பல ஆயிரம் சிந்தனைகள் கொண்டவர் பாரதி. அந்தச் சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலே அடக்க முடியாத சிந்தனைகள் கொண்டவராக பாரதி இருந்ததால்தான் இன்று நாம் அவரைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். குடும்பமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் கேள்வி கேட்டவர் பாரதியார். கடந்த ஆகஸ்ட் 15ம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விட்டு முதலமைச்சர் என்ற முறையில் நான் உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

திமுக அரசு அமைந்தவுடன், தலைவர் கலைஞர் முதலமைச்சரான போது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கி பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர். அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை நேற்றைக்கு முன்தினம் தமிழ்நாடு அரசு சார்பில் நான் அறிவித்திருக்கிறேன்.

மொழிப்போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும், எல்லைப் போராட்ட வீரர்களை போற்றுவதற்கும்,  திமுக அரசு எப்போதும் மறந்தது இல்லை. நான் அதை பட்டியலிட ஆரம்பித்தால் அது மிக நீளமாகப் போய்விடும்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அறிவிப்புகளை கடந்த வாரத்தில் நான் செய்தேன். பாரதியின் நண்பர் பரலி சு.நெல்லையப்பருக்கு நிதி உதவி வழங்கி வந்த அரசு தான் திமுக அரசு.  அந்த வரிசையில் தான் பாரதி நினைவு நூற்றாண்டு விழாவையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது. பாரதியைப் போற்றுவதற்குக் காரணம், அவரது சிந்தனைகள் காலங்களைக் கடந்தும் தேவைப்படுபவை என்பதால் தான்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே  தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் - என்று இன்றைக்கு பாரதி அதற்காக தேவைப்படுகிறார். சாதி நூறு சொல்லுவாய் போ போ போ - என்று விரட்டிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார். ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே - என்று கண்டிக்க பாரதி இன்றும் தேவைப்படுகிறார். சாதி, மதங்களைப் பாரோம் - என்று கம்பீரமாக அறிவிக்க பாரதி இன்றும் தேவைப்படுகிறார். முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை - என்று பிரகடனம் செய்வதற்கு பாரதி இன்றும் தேவைப்படுகிறார்.

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - என்று தமிழ் வெறியோடு பாடக்கூடிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார். இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து எழுதி விட்டு ஒம் சக்தி என்று முடிக்கும் சகோதரத்துவப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார். சங்கராபரணம் இராகத்தில் அல்லாவுக்கும் பாட்டு எழுதிய பரந்தமனப்பான்மை பாரதி இன்றும் தேவைப்படுகிறார். காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் - என்று சுற்றுச்சூழல் பேசிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்.

இத்தகைய பாரதிகள் இன்றும் தேவை. காலத்தின் தேவை/ அன்பு வேண்டும், அறிவு வேண்டும், கல்வி வேண்டும், நீதி வேண்டும் - இந்த நான்கையும் தான் பாரதி விரும்பினார். அவரது எல்லாப் பாட்டுக்கும் அடிப்படை இதுதான். இந்த நான்கும் கொண்டவர்கள் மேலோர், மற்றவர்கள் கீழோர் என்பது பாரதியின் கருத்து. இத்தகைய மேலோரை உருவாக்க வானவில் பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் இன்னும் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அந்த முயற்சிக்கு திமுக தலைமையில் அமைந்திருக்கக்கூடிய அரசு என்றைக்கும் துணை நிற்கும் என்றார்.

* ‘ஸ்டாலின் அண்ணா’
முதல்வர் மு.க.ஸ்டாலின், மகாகவி பாரதி சுடரை ஏற்றிவைத்தார். பின்னர், ஒன்றிய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசத்தொடங்கினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ‘ஸ்டாலின் அண்ணா’ என்று தமிழில் அழைத்து பேசினார். அப்போது, விழாவில் கலந்துகொண்டவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* முதல்வருடன் ஒன்றிய அமைச்சர்
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அமைச்சரும் இணைந்து பங்கேற்ற விழா இதுவரை நடந்ததில்லை. 3 வேளாண்சட்டங்கள், சி.ஏ.ஏ., நீட்தேர்வு உள்ளிட்ட முடிவுகளிலும், கொள்கை அளவில் பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசோடு முரண்பட்டிருந்தாலும், பாரதி நினைவு நூற்றாண்டு போன்ற பொதுநிகழ்ச்சிகளில் மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து பங்கேற்பது வரவேற்கத்தக்கது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Bharathiyar Memorial Centenary Celebration ,Tiruvallikeni, Chennai ,Chief Minister ,MK Stalin ,Union Minister , Bharathiyar Memorial Centenary Celebration at Tiruvallikeni, Chennai: Chief Minister MK Stalin, Union Minister participate on the same platform
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...