×

ஆழ்ந்த காற்றழுத்தம் தமிழகத்தில் சில இடங்களில் மழை

சென்னை: தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளதாலும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் மற்றும் வெப்பத்தால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று வால்பாறையில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே கடந்த நான்கு நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது. இது வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. மேலும் இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களிலும், வட உள் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். மேலும், வட மேற்கு வங்கக் கடல், மேற்கு வங்கம், ஒடிசா கடலோர பகுதிகள், வட ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். மன்னார் வளைகுடா பகுதியிலும் பலத்த காற்று வீசும். அதனால் மேற்கண்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Tags : Tamil Nadu , Deep showers in some parts of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...