கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தும் அடம் கர்நாடக அரசு 26 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு தராமல் பிடிவாதம்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு 26 டிஎம்சி பாக்கி நீரை தராமல் அடம்பிடித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவணைக்காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 177 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், முழுமையாக தருவதில்லை. அதே நேரத்தில், கர்நாடகா அரசு உபரி நீரை, நீதிமன்ற உத்தரவுபடி திறந்துவிட்டதாக கணக்கு காட்டுகிறது.

அதன்படி நடப்பாண்டிலும் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சியில் 7.6 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியில் 22.64 டிஎம்சியும், ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டிஎம்சியில் 22.6 டிஎம்சியும், செப்டம்பர் மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை 9 டிஎம்சியில் 11 டிஎம்சி தந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 96.18 டிஎம்சியில் 69.8 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்துள்ளது. தற்போது வரை 26.3 டிஎம்சி வரை கர்நாடகா பாக்கி வைத்துள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 38 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

அதேநேரத்தில் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 77 சதவீதம், கபினியில் 90 சதவீதம், ஹாரங்கியில் 96 சதவீதம், ஹேமாவதியில் 83 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. எனவே, கர்நாடகா அரசு நினைத்தால் பாக்கி டிஎம்சி நீரை தரலாம். ஆனால், வேண்டுமென்றே தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இழுத்தடித்து வருகிறது. தற்போதைய நிலையை பார்க்கும் போது, 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை 76 அடியாக உள்ளது. 6 அடி குறைந்தால் தண்ணீர் பாசனத்துக்கு தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், தமிழக அரசு கர்நாடகாவிடம் தண்ணீர் பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

Related Stories:

>