×

நீளம் குறைந்த விசைத்தறி சேலை, வேட்டி வாங்கியதில் ரூ.7 கோடி வீண் கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ்க்கு பல கோடி நஷ்டம்: தமிழக அரசுக்கு ஊழியர்கள் சங்கம் பரபரப்பு கடிதம்

சென்னை: கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்துக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதுகுறித்து, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் கைத்தறி முதன்மை செயலாளர் அபூர்வா, கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் ராஜேஷ் ஆகியோருக்கு எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது:
* கடந்த 2015 அக்டோபர் 6ம் தேதி நிர்வாக குழு கூட்டத்தில் வெளிநாட்டு கம்பெனி தர வேண்டிய ரூ.5,22,996 வஜா செய்வதற்கு அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
* அரசு தர வேண்டிய தள்ளுபடி மானியம், ஜனதா ரக மானிய தொகை ரூ.3 கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 368 அரசு வழங்காததால் தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* இந்த அரசால் நிராகரிக்கப்பட்ட சிட்டா நூல் மானியம் ரூ.127 கோடி வஜா செய்வதற்கு கடந்த 2015 அக்டோபர் 6ம் தேதி நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* நீளம் குறைவான விசைத்தறி சேலைகள், வேட்டிகள் வாங்கியதில் ரூ.7 கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்து 925 வஜா செய்வதற்கு நிர்வாக குழு கூட்டத்தில் கடந்த 2016ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீளம் குறைவாக ஜவுளி வாங்கியதில் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு தொடர்பு இல்லை என்றாலும் நஷ்டத்தை காரணம் காட்டி 640 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்வதற்கு கொள்முதல் பிரிவு ஊழியர்கள் காரணமாக இருந்துள்ளனர். இந்த நஷ்டத்தை அவர்கள் மீது நிர்வாகம் சுமத்தவில்லை.
* ஈரோடு வசந்தம் விற்பனை நிலையத்தில் மொத்த விற்பனையில் ரூ.23 லட்சத்து 44 ஆயிரத்து 439 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூட்டுறவு தணிக்கை துறை குறைகளை சுட்டிக்காட்டி பொறுப்பு நிர்ணயம் செய்தது. பின்னர் கைவிட்டது.
* சேலம் கொள்முதலில் தலைமை அலுவலக அனுமதியில்லாமல் டிசைன் சார்ஜ் நிர்ணயம் செய்தததும், புடவைகளுக்கு ஸ்டோன் வைத்ததில் அதிக விலைக்கு நிர்ணயம் செய்ததையும் கூட்டுறவு தணிக்கை துறை கண்டுபிடித்து கோடி ரூபாய் அளவிற்கு பொறுப்பு நிர்ணயம் செய்ததை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
* கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஊத்தங்கரை  நூற்பாலைக்கு முன்பணம் வழங்கிய வகையில் ரூ.4 கோடி வரை தர வேண்டியுள்ளது. கோவையில் தமிழ்நாடு பஞ்சாலை கழகமும் பல லட்ச ரூபாய் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு தர வேண்டியுள்ளது. சுமார் 5 வருடங்களாக மேற்கண்ட நிறுவனங்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கி தொகையை வசூலிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும், கூட்டுறவு தணிக்கையும் தனது கடமையில் இருந்து விலகி விட்டது. இதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பல கோடி வட்டியாக மட்டும் இழப்பை சந்தித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Co-optex ,AIADMK , Co-optex loses Rs 7 crore in last 5 years of AIADMK rule: Co-optex loses Rs 7 crore
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்