×

தலிபான்களின் புதிய கொள்கை முடிவு அறிவிப்பு ஆப்கானில் முதுநிலை வரை பெண்கள் கல்வி பயிலலாம்: புர்கா, ஹிஜாப் அணிய வேண்டும்; முகத்தை மூடுவது கட்டாயமில்லை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் கல்வி பயிலலாம் என தலிபான்களின் புதிய கொள்கை முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபாலர் கல்வி முறை கிடையாது. கடுமையான உடை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் இடைக்கால அரசை அமைத்துள்ளனர். கடந்த 1996-2001 வரை தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. பெண்கள் உரிமை நசுக்கப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பானது. ஆனால், இம்முறை பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலிபான் அரசின் உயர் கல்வி அமைச்சரான அப்துல் பாகி ஹக்கானி, கல்வித் துறையில் தலிபான்களின் புதிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். அதில் அவர், ‘‘20 ஆண்டை பின்நோக்கி பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இன்று இருப்பதை கொண்டு புதிய தொடக்கத்தை துவங்கப் போகிறோம். ஆப்கானில் பெண்கள் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் பயிலலாம். ஆனால், பல்கலைக் கழகங்களில் இருபாலர் சேர்ந்து படிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பெண்களுக்கான தனி கல்லூரியில் அவர்கள் பயிலலாம். அவர்களுக்கு நிச்சயம் ஆடை கட்டுப்பாடு உண்டு. புர்கா, ஹிஜாப் (தலை, கழுத்து, மார்பு பகுதியை மறைக்கும் ஆடை) கட்டாயம் அணிய வேண்டும். அதே சமயம், முகத்தை மூடுவது, ஸ்கார்ப் அணிவது அவரவர் விருப்பம்,’’ என்றார். அதே சமயம் தற்போதுள்ள பாடத்திட்டங்கள் மாற்றங்கள் வரும் என்பதை மட்டும் அமைச்சர் ஹக்கானி கூறி உள்ளார். தலிபான்கள் பெரும்பாலும் மத கல்வியையே போதிப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

* இசைக் கலைஞர்கள், குத்துச்சண்டை வீராங்கனை ஓட்டம்
தலிபான்கள் ஆட்சியில் இசைக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது. சமீபத்தில் நாட்டுப்புற இசைக்கலைஞர் ஒருவரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், ஆப்கானில் உள்ள இசைக் கலைஞர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். அது மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள ஆப்கான் இசைக்கலைஞர்கள் கூட தங்களின் கச்சேரிகளை ரத்து செய்துள்ளனர். இசைக்கருவி கடைகளை மூடி உள்ளனர். ‘இசை தலிபான்காளின் விரோதி. அதனால், எது வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே, இந்த கலையை விட்டே செல்கிறோம்,’ என்கின்றனர் ஆப்கான் இசைக் கலைஞர்கள். இதே போல், விளையாட்டு துறையிலும் பெண்களை தலிபான்கள் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் ஆப்கான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தடை விதித்த நிலையில், பெண் குத்துச் சண்டை வீராங்கனையான ஷீமா ரெசாயை கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால், குத்துச்சண்டை விளையாட்டுக்காக ஷீமா தனது குடும்பத்துடன் ஆப்கானில் இருந்து வெளியேற உள்ளார்.

* பணிக்கு திரும்பும் மக்கள்
கடந்த மாதம் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து, அரசு பணியாளர்கள், விமான நிலைய பெண் பணியாளர்கள், போலீசார் பலர் உயிருக்கு பயந்து வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். அவர்களில் பலர் தற்போது சகஜ வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். காபூல் விமான நிலையத்தில், தலிபான்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதே போல், காபூல் விமான நிலையத்தில் பணிபுரியும் 80 பெண்களில் 12 பேர் வேலைக்கு வரத் தொடங்கி உள்ளனர். நிதிச் சுமையால் வேறு வழியின்றி தலிபான்களுடன் வாழத் தொடங்குவதாக அவர்களில் சிலர் கூறி உள்ளனர். முந்தைய அரசின் ராணுவ வீரர்கள், போலீசார், பிற பாதுகாப்பு படையினர் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என தலிபான்களும் பச்சைக்கொடி காட்டி உள்ளனர்.

Tags : Taliban , Taliban announces new policy decision It is not mandatory to cover the face
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை