கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் பயங்கர தீவிபத்து

துரைப்பாக்கம்: பனையூர் குடுமியாண்டி தோப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன் (48), பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில், குடிசை அமைத்து ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு சமையல்காரர் உள்பட 5 பேர் வேலை செய்கின்றனர். நேற்று வழக்கம்போல், ஊழியர்கள்  உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கணேசன் என்ற ஊழியர் அப்பளம் பொரிப்பதற்காக எண்ணெயை சூடுபடுத்தியபோது, எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.

காற்றில் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

தகவலறிந்து திருவான்மியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடை மற்றும் உள்ளே இருந்த அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு மற்றும் உணவு பொருட்களும், மேஜை, நாற்காலி ஆகியவைகளும் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீவிபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories:

>