×

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சீல்: ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே பொதுமக்கள் போராட்டத்தின் எதிரொலியாக தனியார் நிதி நிறுவன அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரஃபேல் என்ற தனியார் நிதி நிறுவனம்  செயல்பட்டு வருகின்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, அம்மையார்குப்பம் பகுதிகளில் செயல்ப்பட்டு வந்த அந்த நிறுவனத்தின் முகவர்கள்  பொதுமக்களை சந்தித்து ஒரு முறை குறிப்பிட்ட பணம் செலுத்தினால் வீட்டு உபயோக பொருட்கள் வருடம் முழுவதும் வீடு தேடி வந்து வழங்குவது, மாதம் ரூ. 3000 செலுத்தினால் இரண்டு சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ. 15 ஆயிரம் வட்டி, ரூ. 35 ஆயிரம் செலுத்தினால் வாரம் ரூ. 2,500 வட்டி வழங்கப்படும் என்று பல்வேறு கவர்ச்சி விளம்பரங்களை நம்பி  ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆரம்பத்தில் அனைவருக்கும் பொருட்கள், வட்டி முறையாக வழங்கப்பட்டு வந்ததால், அதிக வட்டிக்கு, குறைந்த முதலீட்டில் ஆண்டு முழுவதும் வீட்டு உபயோக பொருட்கள் பெற்று பயன்பெற ஆசைப்பட்டு ஏராளமானோர் முதலீடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து ரூ. 20 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக முதலீடு செய்த பொதுமக்களுக்கு வட்டி வழங்குவது நிறுத்தப்பட்டநிலையில், பொருட்களும் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் செயல்ப்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பணம் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிறுவனத்திடமிருந்து முதலீடு செய்த பணத்திற்கு முறையாக பதில் இல்லாததால், 300க்கும் மேற்பட்டோர் பணம் மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து முதலீடு செய்த பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அம்மையார்குப்பத்தில் செயல்பட்டு வந்த அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை ஈடுபட்டு, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வட்டாட்சியர் மணிவாசகம் நிதி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தார். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.   


Tags : RKpet , Public protest echoes private financial institution office sealed: commotion near RKpet
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...