திருவள்ளூர் மாவட்டத்தில் 1029 முகாம்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 1029முகாம்களில் 1லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி போடுவதை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கிவைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பு ஊசி போடுதல் நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த முகாமை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சிவன் கோயில், சோழம்பேடு சாலை, நேரு பஜார் ஆகிய இடங்களில் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி அதிகபட்சமாக 58 ஆயிரம் நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் முதன்மை வகிக்கிறது. இந்திய அளவில் தொற்று இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நேற்று மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று மாவட்டம் முழுவதும் 1029 இடங்களில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன் களப்பணியாளர்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், ஆவடி மாநகராட்சியில் 92 முகாம்களில் 460 முன் களப்பணியாளர்கள் மூலமாக 13 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் வயது உடையவர்கள் 19 லட்சம் பேர்.  இதில், 47.08 சதவீதம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதி உள்ள நபர்களுக்கு விரைவில் தடுப்பு ஊசி செலுத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கும் என்ற அடிப்படையில் தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அனைத்து அதிகாரிகளும் தடுப்பூசி முகாம்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். எனவே, மாவட்டம் முழுவதும் மக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முகாமிற்கு நகராட்சி நிர்வாக இயக்குனரும், கண்காணிப்பு அலுவலரான பா.பொன்னையா, மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் உமா மகேஸ்வரி, சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், துணை இயக்குனர்கள் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் ஜவஹர்லால், ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார், பொறியாளர் வைத்திலிங்கம், சுகாதார அலுவலர் ஜாபர், நகரமைப்பு ஆய்வாளர் தினகரன், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெ.ரமேஷ், மாநகர செயலாளர்கள் பேபி வி.சேகர், ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>