காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து ஜி 23க்கு இனிமேல் எந்த முக்கியத்துவமும் இல்லை: பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்க ஆதரவு

புதுடெல்லி: ‘ஜி-23க்கு இனிமேல் எந்த முக்கியத்துவமும் இல்லை,’ என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால், தேர்தல் மூலம்தான் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தேசிய, மாநில அமைப்புகளின் நிர்வாகிகளையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும்படியும் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதில், குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, கபில் சிபல் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றனர். தற்போது, இவர்களில் பலர் சோனியாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த அதிருப்தி தலைவர்களின் அணி, ‘ஜி -23’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் சேர்க்க, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், சில முக்கிய மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘ஜி 23’ தலைவர்களின் கட்சிக்கு எதிரான போக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். கட்சியில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், அதை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் என்னை போன்ற பல தலைவர்கள், ‘ஜி-23’ கடிதத்தில் கையெழுத்திட்டோம். கட்சியை சீரழிப்பதற்காக அல்ல. காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணைவதை எதிர்ப்பவர்கள், கட்சியின் சீர்திருத்தத்துக்கு எதிரானவர்கள். சில தலைவர்கள் ‘ஜி-23’யை தவறாக பயன்படுத்துகிறார்கள். கட்சியை மேல்மட்டத்திலும், அடிமட்டத்தில் இருந்தும் சீரமைக்க வேண்டும் என இதற்கு முன்பாக சோனியா காந்தி நினைக்கவில்லை. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே, இனிமேல், ஜி 23-க்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என சிலருக்கு உள்நோக்கம் இருக்கிறது. நாங்கள் அதற்காக ஒன்று சேரவில்லை. அதை கடுமையாக எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: