சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் விரைவில் 3ம் பட்டியல்: முதல்முறையாக சொத்து பட்டியலும் தருவதால் பரபரப்பு

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர். இவற்றை மீட்டு வருவதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடப் போவதாக 2014 தேர்தலில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி இன்று வரையிலும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்நிலையில், இந்தியர்களின் வங்கி கணக்குகளின் பட்டியலை, ‘தானியங்கி தகவல் பரிமாற்றம்’ ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு, செப்டம்பரில் முதல் பட்டியலை அது அளித்தது. கடந்தாண்டு செப்டம்பரில் 2வது பட்டியலை வழங்கியது.

இந்நிலையில், 3வது பட்டியலை இந்த மாதம் அது அளிக்க உள்ளது. ஆனால், இந்த புதிய பட்டியலில் அந்நாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள வங்கி கணக்குகளின் விவரங்கள் மட்டுமின்றி,  சொத்துகளின் பட்டியலும் முதல்முறையாக அளிக்கப்பட உள்ளது. இதில், கூட்டு சொத்துகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்கள் உட்பட பல்வேறு சொத்துகளின் விவரங்களும், அவற்றின் மூலம் பெறப்படும் வருமானங்களின் விவரங்களும் அளிக்கப்பட உள்ளன. எனவே, இந்த பட்டியலின் மூலம்  பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>