×

கொடுமணல் அகழாய்வு இறுதிகட்ட பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம்: சென்னிமலை அருகே கொடுமணலில் நடந்துவரும் இறுதிகட்ட அகழாய்வு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் கரை ஓரம் கொடுமணல் கிராமத்தில் சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதால் கொடுமணல் பகுதியில் பல கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு நடந்து வரும் இறுதிக்கட்ட அகழாய்வு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது தொழிற்கூடங்கள் இருந்த பகுதி, பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் கல்லறைகள் இருந்த பகுதி ஆகியவற்றை பார்வையிட்டனர். கொடுமணல் அகழாய்வு பணியில் இதுவரை கிடைத்த பழங்கால பொருட்கள் மற்றும் ஆய்வு முறைகள் குறித்து அவர்களிடம் அகழாய்வு பொறுப்பாளர் சுரேஷ் விளக்கினார்.

இது பற்றி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் உள்ளது. இங்கு பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தொல்லியல் துறையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடம் குறித்து சங்க நூல்களில் குறிப்புகள் உள்ளது. தமிழர்களுடைய பண்பாடு, கலாச்சாரம், அவர்கள் செய்த தொழில்கள், கடல் கடந்து ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரங்கள் நொய்யல் நதிக்கரையோரம் கொடுமணலில் கிடைக்கப்பெற்றுள்ளது.

தொல்லியல் துறையின் மூலம் அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொருள்கள், தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு  தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அகழ்வாராய்ச்சி பற்றி கூறியபோது கொடுமணல் பகுதியை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அகழ்வாராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொடுமணலில் கிடைக்கப்பெறும் பொருள்களை மக்கள் அறியும் வண்ணம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காட்சிகள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

Tags : Kodumanal ,Minister ,M.P. Saminathan , Kodumanal excavation final phase work: Minister M.P. Saminathan study
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...