×

பைனலில் லெய்லாவை வீழ்த்தி சாதனை: யுஎஸ் ஓபன் டென்னிஸ் 18 வயது இளம் வீராங்கனை எம்மா ரடுகானு சாம்பியன்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 18 வயது இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான இறுதிப் போட்டியில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசுடன் (19 வயது, 73வது ரேங்க்) மோதிய ரடுகானு (150வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டின்போது காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில், சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடர்ந்த அவர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி தனது முதல் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டீனேஜ் வீராங்கனைகள் மோதிய விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 51 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக எம்மா ரடுகானு பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். மகளிர் டென்னிசில் புதிய நட்சத்திரங்களாக ஜொலிக்கத் தொடங்கியிருக்கும் எம்மா, லெய்லா இருவரும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டுள்ளனர்.

* யாதும் ஊரே!
லெய்லா மட்டுமல்ல, ரடுகானுவும் கனடாவில் பிறந்தவர் தான். தந்தை இயான் ருமேனியாவையும், தாய் ரெனீ சீனாவையும் சேர்ந்தவர்கள். 2வது வயதில் பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறினார். பாட்டி, ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் வசித்து வருவதால் அடிக்கடி அங்கு சென்று வருவார். இவரது அபிமான வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நா லி (சீனா). கார் பந்தயத்திலும் அதீத ஈடுபாடு உள்ளவர்.

* 150ல் இருந்து... 23வது இடத்துக்கு!
இந்த ஆண்டு விம்பிள்டன் தொடரில் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கி 4வது சுற்று வரை முன்னேறிய ரடுகானு, மூச்சுத்திணறல் காரணமாக போட்டியில் இருந்து விலக நேரிட்டது. அந்த தொடரிலேயே யார் இந்த வீராங்கனை என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். யுஎஸ் ஓபனில் 150வது ரேங்க் வீராங்கனையாக தகுதிச்சுற்றில் களமிறங்கி, நம்ப முடியாத வகையில் இளம் கிராண்ட் ஸ்லாம் சாம்பியனாகி உள்ள ரடுகானு ஒரேயடியாக 127 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. தகுதிச் சுற்று முடிந்த கையோடு நாடு திரும்புவதற்காக விமான டிக்கெட் புக் செய்து வைத்திருந்தவர், இப்போது யுஎஸ் ஓபன் கோப்பை மற்றும் முதல் பரிசாகக் கிடைத்த ரூ.18.31 கோடியுடன் இங்கிலாந்து செல்கிறார்.

* 44 ஆண்டுக்கு பிறகு!
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் 1977ம் ஆண்டு இங்கிலாந்தின் வர்ஜினியா வேடு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதன் பிறகு வேறு எந்த இங்கிலாந்து வீராங்கனையும் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. 44 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அதை சாதித்த எம்மா, லெய்லாவை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டார்.
* ரஷ்யாவின் மரியா ஷரபோவாவிற்கு பிறகு (2004 விம்பிள்டன்) கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையும் ரடுகானுவுக்கு கிடைத்துள்ளது.
* கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இளம் வயது இங்கிலாந்து நாட்டவர் என்ற சாதனையையும் எம்மா வசப்படுத்தி உள்ளார்.
* 2014 யுஎஸ் ஓபனில் செரீனா ஒரு செட்டில் கூட தோற்காமல் கோப்பையை வென்றிருந்தார். அந்த சாதனையை ரடுகானு சமன் செய்தார்.
* யுஎஸ் ஓபன் தொடரில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வென்ற முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையும் எம்மாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக 1968ல் வர்ஜினியா வேடு இங்கு பட்டம் வென்றிருந்தார்.
* கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் பட்டம் வென்ற முதல் தகுதி நிலை வீராங்கனை என்ற சாதனையயும் ரடுகானு வசப்படுத்தி உள்ளார். தகுதிச் சுற்றில் 3 வீராங்கனைகள், பிரதான சுற்றில் 7 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேரை தொடர்ச்சியாக வீழ்த்தி அவர் பட்டம் வென்றார்.


Tags : Emma Radukanu ,US Open ,Leila , 18-year-old US Open tennis champion Emma Radukanu defeats Leila in final
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்