ஆந்திராவில் சினிமா பாடல்களுக்கு நடனமாடியபடி போலீசார் நடத்திய விநாயகர் ஊர்வலம்

திருமலை: ஆந்திராவில் ‘‘மன்மத ராசா மன்மத ராசா’’ உள்ளிட்ட சினிமா பாடல்களுக்கு நடனமாடி விநாயகர் சிலையை போலீசார் கரைத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பாதுகாப்பிற்காக ஆந்திர மாநில அரசின் ஆக்டோபஸ் கமாண்டோ படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருமலையில் உள்ள பாஞ்சஜன்யம் பக்தர்கள் ஓய்வறையில் ஆக்டோபஸ் கமாண்டோ படை வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்த ஓய்வறையில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. 3வது நாளான நேற்று விநாயகர் சிலையை போலீசார் ஜீப்பில் வைத்து ஊர்வலமாக பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள கோகர்ப்பம் அணைக்கு கொண்டு வந்தனர்.

 

அப்போது கலர் பவுடர்களை வீசியும், முகத்தில் பூசி கொண்டும் போலீசார் விசில் அடித்தும், பாம்பு நடனமாடியும், செல்போனில் மாஸ்டர் திரைப்பட பாடலுக்கும், ‘‘மன்மத ராசா மன்மத ராசா’’ பாடலுக்கும் நடனமாடி விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று அணையில் கரைத்தனர். கொரோனா பரவல் காரணமாக உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசு விநாயகர் ஊர்வலம் எவ்வித கொண்டாட்டங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை மீறி போலீசார் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக விநாயகரை கொண்டு சென்று அணையில் கரைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: