நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டில் போட்டோ மாற்றம் மாணவி ஐகோர்ட் கிளையில் வழக்கு: நள்ளிரவில் விசாரித்து அனுமதி வழங்கினார் நீதிபதி

மதுரை: மதுரை ஷெனாய் நகரை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று முன்தினம் இரவு தாக்கல் செய்த அவசர மனு: என் மகள் சண்முகப்பிரியா, பிளஸ் 2வில் 91.54 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவராக வேண்டும் என்பது அவரது லட்சியம். நீட் நுழைவுத்தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார் இதற்கான ஹால் டிக்கெட்டில் எனது மகளின் புகைப்படத்திற்கு பதிலாக அலெக்ஸ் பாண்டியன் என்பவரது புகைப்படம் இருந்தது. புகைப்படம் மாறியிருப்பதால் அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். எனவே நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக எனது மகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுதாரர் வக்கீல் எம்.சரவணன், மனுவின் அவசரம் குறித்து பதிவுத்துறையில் முறையிட்டார். இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இந்த மனுவை விசாரித்து அளித்த உத்தரவில் ‘‘மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் மாணவி படித்துள்ளார். அதற்கேற்ப மதிப்பெண் பெற்றுள்ளார். முறைப்படி ஆன்லைனில் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் ஹால் டிக்கெட்டில் மாணவியின் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அவரது எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவியை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை வீரபாஞ்சானில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்’’ என நேற்று அதிகாலை ஒரு மணிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மாணவி, அங்கு தேர்வு எழுதினார்.

Related Stories:

More