கவனத்தை ஈர்த்த சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தமிழக முதல்வரின் பல்வேறு அறிவிப்புகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதல்வரின் பல்வேறு அறிவிப்புகளுக்கு மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 13ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் கூடியது. வரலாற்றில் முதல் முறையாக, இரண்டு நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. 13ம் தேதி பொது பட்ஜெட் (திருத்திய நிதிநிலை அறிக்கை), 14ம் தேதி வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. முதல்முறையாக நிதி நிலை அறிக்கை காகிதமில்லாத நிதி நிலை அறிக்கையாக தாக்கல்செய்யப்பட்டது.  

பொது பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குப் புத்துயிர் அளிக்கப்படும். 2010 முதல் வழங்கப்படாமலிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, இனி ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 3ம் நாள், 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு. பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பொது பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

இதேபோல், 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறை பட்ஜெட்டில், நிகர சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை, இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு, 2021-22ல் இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், நெல் சாகுபடி ஆதரவு விலை குவிண்டாலுக்கு சன்னரகத்திற்கு ரூ.30ம், சாதாரண ரகத்திற்கு ரூ.25ம் உயர்த்தி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 24ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல் அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவை முதல்வர் தாக்கல் செய்தார். இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம்.

110 விதியின் கீழ் இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி மற்றும் அவர்களின் நலன்களை காக்க ரூ.317.40 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு. ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம். பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கக்கூடிய வகையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

1987ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.4 கோடியில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். அயோத்திதாசரின் 175வது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கபடும் ஆகிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தாளையொட்டி 14 அறிவிப்புகள் வெளியீடப்பட்டது. மேலும், 110 விதியின் கீழ் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் தேதி ‘சமூக நீதி நாள்’ ஆக கொண்டாடப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதேபோல், அரசுப்பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக 13 அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார். இந்திய குடியுரிமைத் திருத்தச்சட்டம் 2019ஐ ரத்து செய்யக்கோரி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கிடைத்த அறிய பொருட்களை வைத்து நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு மக்கள் நல அறிவிப்புகளும், திட்டங்களும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. இதனால், மக்களுக்கு மாதத்தில் பெருமளவு பணம் மிச்சமானது என்று மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர். மேலும் எந்த கூட்டத் தொடரிலும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அதிக நேரமும், அதிக வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத் தொடரில் தன்னை பற்றி புகழ்ந்து பேச வேண்டாம். இதனால், நேரம் தான் வீணாகும். மக்கள் பிரச்னைகளை மட்டும் பேசுங்கள் என்று திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது அனைத்து கட்சியினரையும், மக்களையும் வெகுவாக ஈர்த்தது.

* வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை

* பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி ரத்து

* பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

* தலைவர்களுக்கு மணி மண்டபங்கள்

* ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

* தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாள்

* இலங்கை தமிழர்கள் நலனுக்காக ரூ.317 கோடி

* இந்திய குடியுரிமைத் திருத்தச்சட்டம் (சிஏஏ) ரத்து கோரி தீர்மானம்

Related Stories:

>