×

தமிழக அரசின் தடை உத்தரவையும் மீறி மாமல்லபுரம் அருகே கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடலில் வாலிபர்கள் குத்தாட்டம்

சென்னை:  மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து, புராதன சின்னங்களை கண்டு ரசித்தும், கடற்கரைக்கு சென்று ஆனந்த குளியல் போட்டு குதூகலம் அடைவது வழக்கம். இந்நிலையில், கொரோனா 3வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் தமிழக அரசு சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளை சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைத்து விடுகின்றனர்.

இதையறிந்த, சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்றால் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி விடுவார்கள் என கருதி மாமல்லபுரம் நகருக்கு செல்லாமல், ஒதுக்குப்புற பகுதியான மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தைக்கு சென்றனர். அங்கு, அவர்கள் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் வேன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி விட்டு கடற்கரைக்கு செல்கின்றனர். இதனால், ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் அணி வகுத்து நிற்பதை பார்க்க முடிந்தது.

மேலும், வெறிச்சோடி கிடந்த கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டத்தையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் தங்கள் உயிரை முக்கியமென கருதாமல் கடலில் இறங்கி குத்தாட்டம் போட்டனர். கடற்கரை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததே இதற்கு காரணம் ஆகும். இ.சி.ஆர்., சாலையில் போலீசார் ரோந்து பணியில் இல்லாததால், இதை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் சுலபமாக கடற்கரைக்கு சென்று விட்டனர். மேலும், கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடுகள் முடியும் வரை மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம கடற்கரை பகுதியில் போலீசாரை நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mamallapuram ,Tamil Nadu government , Tourists congregate on the beach near Mamallapuram in defiance of the ban order of the Tamil Nadu government: teenagers stabbed at sea
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ