குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு: முதல் முறை எம்எல்ஏ.வுக்கு அதிர்ஷ்டம்

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக எம்எல்ஏ.வான இவர், ஒரே இரவில் முதல்வராக்கப்பட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபானி (65) நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது பதவி விலகலுக்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. ‘கட்சியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ என ரூபானியும் கூறினார்.

அடுத்தாண்டு இங்கு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ரூபானியின் பதவி விலகல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரூபானி ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டம் காந்தி நகரில் நேற்று நடந்தது. பாஜ.வின் 112 எம்எல்ஏ.க்களில் பெரும்பாலானோர் பங்கேற்றனர். பாஜ மேலிட பார்வையாளர்களாக வந்த ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் ஜோஷி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தருண் சாங்க் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

புதிய முதல்வர் பதவிக்கு தற்போதைய துணை முதல்வர் நிதின் படேல், ஒன்றிய அமைச்சர்கள் மன்சுக் மண்டாவியா, பிரபுல் படேல் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. குறிப்பாக, படிதார் சமூகத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்பதால் நிதின் படேலுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக எம்எல்ஏ.வான பூபேந்திர படேல் (59) புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் படேல் சமூகத்தை சேர்ந்தவர். புதிய முதல்வராக தேர்வான பூபேந்திர படேலுக்கு, விஜய் ரூபானி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பூபேந்திர படேல், விஜய் ரூபானி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனந்திக்கு நெருக்கமானவர்

* புதிய முதல்வரான பூபேந்திர படேல், கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் கட்லோடியா தொகுதியில் 1.17 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனவர்.

* இதற்கு முன் இவர் 2015-2017 வரை அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும், 2010-2015 வரை அகமதாபாத் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

* சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்துள்ள பூபேந்திர படேல், கட்சியின் கடைநிலை தொண்டர்கள் வரையிலும் செல்வாக்கு பெற்றவர்.

* இவர், குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலுக்கு மிக நெருக்கமானவர்.

* இன்று பதவியேற்பு

குஜராத் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பூபேந்திர படேல், இன்று பதவியேற்க உள்ளார். அவருடைய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களின் பட்டியல், கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>